

ஆவடி,
திருமுல்லைவாயல் சத்தியமூர்த்தி நகர் போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் கோவிந்தராஜ் (வயது 32). இவர், ஆவடியை அடுத்த வீராபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படை 3-வது பட்டாலியனில் போலீசாக பணிபுரிந்து வருகிறார்.
இவருடைய மனைவி கோமளா (26). இவர்களுக்கு திருமணமாகி 1 ஆண்டுகள் ஆகிறது. தற்போது கோமளா, 7 மாத கர்ப்பிணியாக இருந்தார். அதே போலீஸ் குடியிருப்பில் வசிப்பவர் சதீஷ் (32). இவரும், வீராபுரம் 3-வது பட்டாலியனில் போலீசாக பணியாற்றுகிறார்.
கோவிந்தராஜிடம் சதீஷ் கடனாக பணம் தரும்படி கேட்டார். அதற்கு அவர், என் மனைவி யாருக்கும் கடன் கொடுக்க கூடாது என்று கூறிவிட்டதாக தெரிவித்தார்.
இதற்கிடையில் நேற்று காலை கோவிந்தராஜ் பணிக்கு சென்று விட்டார். வீட்டில் அவருடைய மனைவி கோமளா மட்டும் தனியாக இருந்தார். தனக்கு கடன் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம் அடைந்த சதீஷ், கோவிந்தராஜ் வீட்டுக்கு சென்று அவரது மனைவி கோமளாவிடம் தக ராறில் ஈடுபட்டார்.
இதில் ஆத்திரம் அடைந்த சதீஷ், தான் மறைத்து வைத்திருந்த காய்கறி நறுக்கும் கத்தியால் கோமளாவின் கழுத்து மற்றும் வலது கையில் சரமாரியாக குத்தினார். இதில் படுகாயம் அடைந்த கோமளாவின் அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு வானகரம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு அவருக்கு கழுத்தில் 2 தையலும், கையில் ஒரு தையலும் போடப்பட்டது. 7 மாத கர்ப்பிணியாக இருந்த கோமளாவுக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்தனர். அப்போது குழந்தைக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்பதால் உடனே அறுவை சிகிச்சை செய்து குழந்தையை வெளியே எடுக்கவேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து மருத்துவமனை யில் கோமளாவுக்கு டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். அதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது.
இது குறித்த புகாரின் பேரில் திருமுல்லைவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்குப்பதிவு செய்து போலீஸ் காரர் சதீசை கைது செய்தார். பின்னர் அவரை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தார்.