ரெயில்வே மேம்பால பணிகளால் நெரிசல்: ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு 2 மாதமாகியும் பணிகள் நடக்காமல் முடக்கம்

ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி நடப்பதையொட்டி வாகனங்கள் செல்ல அமைக்கப்பட்ட மாற்றுப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. அங்கு ஜல்லிக்கற்கள் கொட்டிய பாதையில் தார்சாலை பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ரெயில்வே மேம்பால பணிகளால் நெரிசல்: ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டு 2 மாதமாகியும் பணிகள் நடக்காமல் முடக்கம்
Published on

திருவண்ணாமலை,

ஆன்மிக நகராக விளங்கும் திருவண்ணாமலை நகரமானது 5 சாலைகள் இணையும் இடமாகவும் உள்ளது. பக்தர்கள் வருகை காரணமாக அனைத்து பாதையிலும் போக்குவரத்து நெரிசல் அடிக்கடி ஏற்பட்டு வந்தது. குறிப்பாக சென்னை செல்லும் திண்டிவனம் சாலையில் ரெயில்வே தண்டவாளம் குறுக்கிட்டதால் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. ரெயில்கள் வரும்போது கேட் மூடப்படுவதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதனை தவிர்க்க திருவண்ணாமலைதிண்டிவனம் சாலையில் சுமார் ரூ.30 கோடி மதிப்பில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி கடந்த வருடம் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் திருவண்ணாமலை திண்டிவனம் சாலையில் உள்ள ரெயில்வே கேட் அடைக்கப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

திண்டிவனம் சாலை வழியாக வந்து சென்ற வாகனங்கள் அனைத்து புறவழி சாலை வழியாக சுற்றிக் கொண்டு திருவண்ணாமலை நகரத்திற்குள் வர வேண்டிய நிலையும் அதே பாதையில் வெளியூர் செல்லும் நிலையும் ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். வாகன ஓட்டிகள் சிரமப்படுவதை தவிர்க்க காந்திநகர் புறவழி சாலையில் இருந்து பெருமாள் நகர், கீழ்நாத்தூர், நாவக்கரை வழியாக திண்டிவனம் சாலையை அடையும் வகையில் மாற்றுப்பாதை மாவட்ட நிர்வாகம் மூலம் அமைக்கப்பட்டது.

நாவக்கரையில் இருந்த பெருமாள் நகர் வரையில் உள்ள இடைவெளியில் சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவிற்கு மேல் மண் சாலையாக இருந்தது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த மழையின்போது இந்த சாலையில் வாகனங்கள் செல்ல முடியாத அளவிற்கு மிகவும் மோசமாக சேறும், சகதியாகவும் இருந்தது. இது குறித்து திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் செய்தனர்.

அதைத் தொடர்ந்து தார் சாலை அமைப்பதற்காக அந்த பாதையில் ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டன. இதற்கிடையில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டு தற்போது மக்கள் பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இந்த பாதையில் ஜல்லிக் கற்கள் கொட்டப்பட்டு சுமார் 2 மாதங்களுக்கு மேல் ஆகியும் பணிகள் தொடங்காமல் முடங்கிக்கிடக்கிறது.

இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சிலர் தவறி கீழே விழுந்து காயங்களும் ஏற்பட்டு உள்ளது. எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஜல்லிகள் கொட்டப்பட்டு உள்ள மாற்று பாதையில் தார் சாலை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com