

சென்னை கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் ரூ.14 கோடியில் 7.5 ஏக்கரில் பூங்கா, உணவக கூடம், சிறுவர்கள் விளையாட்டு திடல், அ முதல் ஃ வரை உயிர் எழுத்துகள் என பொழுதுபோக்கு பகுதியாக மாற்றப்பட்டது. இந்த பூங்காவை கடந்த மாதம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைத்தார்.
கொரோனா 3-வது அலை காரணமாக பல்வேறு பூங்காக்கள், பொழுதுபோக்கு மையங்கள் மூடப்பட்டு உள்ளன. காணும் பொங்கலான இன்று(ஞாயிற்றுக்கிழமை) முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் எங்கும் செல்ல முடியாது. இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பொங்கல் பண்டிகை கொண்டாடிய மக்கள், நேற்று முன்தினம் தங்கள் குழந்தைகளுடன் கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தில் குவிந்தனர். சிறுவர் விளையாட்டு பகுதியில் குழந்தைகள் ஊஞ்சல் ஆடி மகிழ்ந்தனர். அ முதல் ஃ வரை எழுத்துக்கள் உள்ள பகுதிகளில் பெண்கள், இளைஞர்கள் ஆசையுடன் செல்பி எடுத்து கொண்டனர்.
2-வது நாளாக நேற்றும் ஏராளமானவர்கள் நகர்ப்புற சதுக்கத்தில் பொங்கல் விடுமுறையை குடும்பத்துடன் கொண்டாடினர். மாலை 6 மணிக்கு பிறகும் கூட்டம் அதிகளவில் கூடியதால் இரவு 7 மணிக்கே அங்கிருந்த மின்விளக்குகள் அணைக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றுவிட்டனர்.