

திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 2-வது அலை கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு கடந்த 10-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழு ஊரடங்கு பிறப்பித்து தற்போது நடைமுறையில் உள்ளது. மேலும் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த காலை 10 மணி வரை மட்டுமே மளிகை கடை, காய்கறி கடை போன்றவற்றை திறக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்த நிலையில் திருவள்ளூரை அடுத்த பேரம்பாக்கம் பஜாரில் பேரம்பாக்கம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான இருளஞ்சேரி, கூவம், குமாரச்சேரி, சிற்றம்பாக்கம், களாம்பாக்கம், சின்னமண்டலி, நரசிங்கபுரம் என 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்கள் வீடுகள் மற்றும் கடைக்காரர்கள் கடைகளுக்கு தேவையான பொருட்களை மொத்தமாக வாங்குவதற்காக பேரம்பாக்கம் பஜார் வீதியில் குவிந்தனர்.
அபராதம்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் கடம்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் ராம்குமார், மப்பேடு சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ், பேரம்பாக்கம் கிராம நிர்வாக அலுவலர் குணா மற்றும் அதிகாரிகள் நேற்று காலை பேரம்பாக்கம் பஜார் பகுதியில் திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு மளிகை மற்றும் காய்கறி கடைகளில் பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக பொருட்களை வாங்க முக கவசம் அணியாமலும், உரிய சமூக இடைவெளியை பின்பற்றாமல் இருந்ததை கண்டு விதிகளை மீறிய 50-க்கும் மேற்பட்ட கடைக்காரர்களுக்கு ரூ.8 ஆயிரம் அபராதம் விதித்தனர்.
மேலும் பேரம்பாக்கம் பகுதிகளில் 4 இடங்களில் தடுப்புகளை அமைத்து பொதுமக்கள் அதனை மீறி செல்லாதவாறு போலீசார் எச்சரித்தனர். அதேபோல் மப்பேடு போலீசார் மப்பேடு, பேரம்பாக்கம், கீழச்சேரி, கொண்டஞ்சேரி போன்ற பகுதிகளில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவையில்லாமல் சுற்றி திரிந்த வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.