கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில், தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.
கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில், தொடர் மின்தடையால் பொதுமக்கள் அவதி
Published on

கூடலூர்,

கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதியில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. இதனால் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் நள்ளிரவு மின்சாரம் அடியோடு துண்டிக்கப்பட்டது. இதனால் கூடலூர், பந்தலூர் தாலுகாக்கள் இருளில் மூழ்கியது. காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் நடமாட்டம் உள்ள பகுதி என்பதால் பொதுமக்களும் அச்சம் அடைந்தனர்.

இதேபோல் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஊசிமலை காட்சிமுனை பகுதியில் ராட்சத மரம் ஒன்று சரிந்து விழுந்தது. இதனால் இரவு நேர போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த கூடலூர் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு மரத்தை தீயணைப்பு படையினர் அப்புறப்படுத்தினர். பின்னர் போக்குவரத்து சீரானது.

ஆனால் மின்சாரம் வினியோகம் தொடர்ந்து பாதிக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள் உள்பட அனைத்து தரப்பினரும் கடும் அவதி அடைந்தனர். இது சம்பந்தமாக மின்வாரிய அலுவலர்கள் தரப்பில் விசாரித்த போது, கூடலூர், பந்தலூர் தாலுகா பகுதிக்கு சிங்காரா மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து மின்வினியோகம் செய்யப்படுகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள உயர் மின்கோபுரங்களில் செல்லும் மின் கம்பிகள் பல இடங்களில் அறுந்து விட்டது. இதனை சீரமைத்த பின்னரே மின்வினியோகம் செய்யப்படும் என விளக்கம் அளிக்கப்பட்டது.

இதனிடையே நேற்று காலை சிங்காரா மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து வரும் மின் வழித்தடங்களில் மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் ஆய்வு செய்தனர். அப்போது அறுந்து கிடந்த மின்கம்பிகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து பல மணி நேரத்துக்கு பிறகு பகல் 3 மணிக்கு மின்சார வினியோகம் செய்யப்பட்டது. இருப்பினும் மின்சார வினியோகம் அடிக்கடி பாதிக்கப்பட்டது.

இது குறித்து பொதுமக்கள் கூறிய தாவது:-

சிங்காரா மின் உற்பத்தி நிலையத்தில் இருந்து கூடலூர் பகுதிக்கு உயர்கோபுரங்கள் வழியாக மின்சாரம் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கு 1 மாதத்துக்கு முன்பு மின் வழித்தட பாதைகளில் மின்வாரியத்தினர் ஆய்வு நடத்தி மோசமாக உள்ள மின்கம்பிகளை மாற்றுவது வழக்கம்.

நடப்பு ஆண்டில் மின்வாரிய அதிகாரிகள் எந்த பராமரிப்பு பணிகளும் சரிவர மேற்கொள்ளாததால் மின்சாரம் அடியோடு துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே உயரதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com