

கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் சுருக்குவலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதில் இரு கிராம மீனவர்கள் இடையே நடந்த மோதலில் அ.தி.மு.க. பிரமுகர் பஞ்சநாதன் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதன் பின்னர் சுருக்குவலையை பயன்படுத்தி மீன் பிடிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.
இதனால் மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடிக்க செல்லவில்லை. இதற்கிடையே மீன்பிடி தடைகாலம் முடிந்த பிறகு ஒரு சில மீனவர்கள் மீன்பிடிக்க சென்று வருகின்றனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகத்தின் தடை அமலில் இருப்பதால், மீனவர்கள் சிரமமடைந்து வந்தனர். அந்த தடையை நீக்கி சுருக்குவலையை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் மீனவர்கள் கோரிக்கை வைத்தனர்.
இதையடுத்து மீனவர்கள், அமைச்சர் எம்.சி.சம்பத்தை நேரில் சந்தித்து சுருக்கு வலையை பயன்படுத்தி மீன்பிடிக்க அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மேலும், அனுமதி வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவோம் என்றும் அவர்கள் அறிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இந்த பிரச்சினை தொடர்பான சமாதான பேச்சுவார்த்தைக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்பு விடுத்து இருந்தது. இதை ஏற்று 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அப்போது கலெக்டர் அலுவலகத்திற்கு அமைச்சர் எம்.சி.சம்பத் வந்தார்.
அவரை பார்த்த மீனவர்கள், அமைச்சரை சந்தித்து தங்களது கோரிக்கையை முன் வைத்தனர். அப்போது அமைச்சர் எம்.சி.சம்பத், இப்பிரச்சினை குறித்து அதிகாரிகள், மீன்வளத்துறை அமைச்சரிடம் பேசி முடிவு எடுக்க 2 நாள் கால அவகாசம் கேட்டதாக தெரிகிறது. இதனை மீனவர்கள் ஏற்று அங்கிருந்து கலைந்து சென்றனர்.
அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியதால் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற இருந்த கூட்டம் நடைபெறவில்லை.
தொடர்ந்து மீனவர் வாழ்வுரிமை இயக்கம் ஏகாம்பரம் நிருபர்களிடம் கூறும்போது, சுருக்கு வலையை பயன்படுத்துவதற்கான தடையை நீக்க வேண்டும் என அமைச்சர் சம்பத்திடம் கூறினோம். உடனே அவர், இந்த பிரச்சினை தொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர், அதிகாரிகளை சந்தித்து பேச வேண்டி இருப்பதால் 2 நாட்கள் மீன்பிடிக்க செல்லாமல் பொறுத்திருக்கும்படி கூறினார். அதை ஏற்று நாங்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருப்போம். உரிய தீர்வு கிடைக்காவிட்டால் மீனவர்கள் அனைவரும் ஒன்று கூடி அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவுசெய்வோம் என்றார்.
இதற்கிடையே இப்பிரச்சினை தொடர்பாக தேவனாம்பட்டினத்தில் மீனவர்கள் அவசர ஆலோசனை கூட்டம் நடத்தினர். இது பற்றி தேவனாம்பட்டினம் மீனவ பஞ்சாயத்து தலைவர்களில் ஒருவரான குப்புராஜ் கூறுகையில், எங்களின் வாழ்வாதாரத்தை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த கோரிக்கையை மாவட்ட நிர்வாகமும், அரசும் நிறைவேற்றும் என்று நம்புகிறோம். இருப்பினும் இன்று (நேற்று) மாலை எங்கள் கிராம மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வில்லை. கடலுக்கு சென்ற ஒரு சில மீனவர்களும் கரைக்கு திரும்பி வந்து விட்டனர்.
நாளை (அதாவது இன்று) எங்களின் கோரிக்கையை வலியுறுத்தி தொடர் வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபடுவது தொடர்பாக எங்கள் கிராமத்துக்கு கட்டுப்பட்டுள்ள 15-க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்களிடம் கருத்து கேட்டு உள்ளோம். அவர்களின் கருத்தை கேட்ட பிறகு அடுத்த கட்ட போராட்டம் பற்றி அறிவிப்போம். நாளைக்கும் (இன்று) நாங்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். இதனால் மீன்பிடிக்க செல்ல மாட்டோம் என்றார்.
மேலும் படகுகளில் கருப்பு கொடி ஏற்றி அமைதியான வழியில் போராட்டம் நடத்தவும் மீனவர்கள் முடிவு செய்துள்ளனர்.