கடலூர் நகரில் அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும் - ஆணையாளர் தகவல்

கடலூர் நகரில் அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும் என ஆணையாளர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடலூர் நகரில் அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும் - ஆணையாளர் தகவல்
Published on

கடலூர்,

கடலூர் நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படும் என்றும் அதற்கான வைப்புத்தொகையை 10 தவணைகளில் செலுத்தலாம் என்றும் நகராட்சி ஆணையாளர் சரவணன் தெரிவித்தார்.

கடலூர் நகரில் 45 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 1 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இந்த நகரில் சுகாதார பிரச்சினை தான் பெரிதாக காணப்படுகிறது. தெருக்களில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்காலில் வீட்டின் கழிவுநீரும், செப்டிக் டேங்க் கழிவுநீரும் கலப்பதால் கொசுத்தொல்லை கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது.

இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண்பதற்காக ரூ.65 கோடியே 14 லட்சம் செலவில் பாதாள சாக்கடை திட்டம் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தை 2 கட்டங்களாக செயல்படுத்த திட்டமிடப்பட்டு முதல் கட்டமாக 33 வார்டுகளில் முழுமையாகவும், 3 வார்டுகளில் பகுதியாகவும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த பாதாள சாக்கடை திட்டத்தின் மூலம் 14 ஆயிரத்து 34 வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு இணைப்பு வழங்க முடியும். நாளொன்றுக்கு ஒரு கோடியே 20 லட்சம் கழிவுநீரை சுத்திகரிக்கமுடியும்.

ஆனால் வைப்புத்தொகை செலுத்தி பாதாள சாக்கடை இணைப்பு எடுப்பதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. இது வரை 2 ஆயிரத்து 385 இணைப்புகளை மட்டுமே பொதுமக்கள் வைப்பு தொகை செலுத்தி பெற்று உள்ளனர். இதனால் பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக பயன்படுத்த முடியாத நிலை காணப்படுகிறது.

இத்திட்டத்தின் நோக்கமே முழுமையடையாததால், அனைத்து வீடுகளுக்கும், வணிக கட்டிடங்களுக்கும் நகராட்சி நிர்வாகம் தாமாகவே பாதாள சாக்கடை இணைப்புகளை கொடுக்க முன்வந்து உள்ளது.

அதன்படி வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கும் பணியை தனியாரிடம் நகராட்சி நிர்வாகம் ஒப்படைத்து உள்ளது. இதையடுத்து கடந்த வாரம் முதல் வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கும் பணி தொடங்கி உள்ளது.

அந்த நிறுவனம் சரியாக ஒரு ஆண்டுக்குள் எஞ்சி உள்ள வீடுகள் மற்றும் வணிக கட்டிடங்களுக்கும் பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டு உள்ளது.

இது பற்றி நகராட்சி ஆணையாளர் சரவணன் கூறியதாவது:-

கடலூர் நகரில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், வணிக கட்டிடங்களுக்கும் நேரடியாக பாதாள சாக்கடை இணைப்புகளை வழங்க உள்ளோம். இந்த பணியை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைத்து உள்ளோம். இதற்காக 6 கோடியே 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களுக்கு எந்தவித செலவும் இல்லாமல் அந்த நிறுவனம் பாதாள சாக்கடைக்கு இணைப்பு வழங்கும். ஆனால் இதற்குரிய வைப்புத்தொகையை பொதுமக்கள் 10 தவணைகளில் நகராட்சி அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.

இதேப்போல் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பும் வழங்க திட்டமிட்டு உள்ளோம். இதற்காக ரூ.5 கோடியே 35 லட்சம் செலவில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அரசின் ஒப்புதல் கிடைத்ததும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீர் இணைப்புகள் வழங்கப்படும்.

இவ்வாறு நகராட்சி ஆணையாளர் சரவணன் கூறினார். அப்போது இளநிலை பொறியாளர் ஜெயபிரகாஷ் உடன் இருந்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com