

கடலூர்,
கடந்த 2004-ம் ஆண்டு டிசம்பர் 26-ந் தேதி உருவான சுனாமி எனும் ஆழிப்பேரலையின் கோரப்பசிக்கு கடலூர் மாவட்டத்தில் 617 பேர் பலியானார்கள். இவர்களுக்கு ஆண்டுதோறும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 13-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச்சில் உள்ள சுனாமி நினைவிடத்தில் மீனவ அமைப்புகள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள், சிறுவர், சிறுமிகள் மலர் வளையம் வைத்தும், மெழுகுவர்த்தி ஏற்றியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
தமிழ்நாடு மீனவர் பேரவை சார்பில் பெரியார் அரசு கலைக்கல்லூரி முன்பு இருந்து மாநில துணை தலைவர் மாரியப்பன் தலைமையில், மாவட்ட தலைவர் எம்.சுப்புராயன், மாநில செயலாளர் கஜேந்திரன் ஆகியோர் முன்னிலையில் மீனவர்கள் ஊர்வலமாக வந்து சுனாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், கடலில் பால் ஊற்றியும், மலர்களை தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
இதில் மாநில மகளிர் அணி செயலாளர் லதா விஜயகுமார், துணை செயலாளர்கள் சுகுணா, பாமா, மாவட்ட துணை தலைவர் கே.சுப்புராயன், செயலாளர் சிவகுமார், பொருளாளர் கந்தசாமி, இளைஞர் அணி தலைவர் கோகிலன், இணை செயலாளர்கள் பழனிவேல், மாலைமணி, மணிமாறன், குகன், சம்பத், மகளிர் அணி சிவபாக்கியம், கோவிந்தம்மாள், இளைஞர் அணி நிர்வாகிகள் மாணிக்கம், சேகர், வீரமுத்து உள்பட பலர் கலந்துகொண்டனர்.
தமிழ்நாடு-புதுச்சேரி மீனவர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் நிறுவன-தலைவர் ஏகாம்பரம் தலைமையில் மாநில பொதுச் செயலாளர் தங்கேஸ்வரன், உயர் நிலை குழு உறுப்பினர்கள் அருள்தாஸ், கன்னியப்பன், ராதா கோதண்டம், அண்ணாமலை, முத்துலிங்கம் ஆகியோர் முன்னிலையில் சுனாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், கடலில் பால் ஊற்றியும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மாநில இளைஞர் அணி தலைவர் பாபு, அரசு ஊழியர் பேரவை தலைவர் ரவிசங்கர், மாநில ஆலோசனை குழு உறுப்பினர்கள் செல்வம், மதி, மாவட்ட செயலாளர் லோட்டஸ் முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் அ.தி.மு.க., தி.மு.க., காங்கிரஸ் கட்சி, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் நாம் தமிழர் கட்சியினர் சுனாமி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்தும், மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள்.
சுனாமியால் பரங்கிப்பேட்டை அருகே உள்ள பில்லுமேடு, சின்னவாய்க்கால் கிராமத்தை சேர்ந்த மீனவர்களும் பலியானார்கள். இதில் பலியானவர்களுக்காக சின்னவாய்க்காலில் சுனாமி நினைவு கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளது. நேற்று சுனாமி நினைவு தினத்தையோட்டி பலியானவர்களின் புகைப்படம் அங்கு வைக்கப்பட்டிருந்தது. சுனாமி நினைவு கல்வெட்டிற்கும், பலியானவர்களின் புகைப்படத்திற்கும் மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் மலர் வளையம் வைத்தும், மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார்கள். சுனாமியில் மகன், மகள், கணவர், உறவினர்களை இழந்தவர்கள் ஒன்றாக கூடி ஒருவரையொட்டி கட்டிப்பிடித்து கதறி அழுதனர்.
இதனை தொடர்ந்து மீனவர்கள் ஊர்வலமாக பிச்சா வரம் உப்பனாற்றுக்கு சென்று, அங்கு பால் ஊற்றி அஞ்சலி செலுத்தினார்கள்.