ஊரடங்கு நிபந்தனைகள் தளர்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 40 சதவீத கடைகள் திறக்கப்பட்டன

ஊரடங்கில் சில நிபந்தனைகளை தளர்த்தி உத்தரவிட்டதின் எதிரொலியாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 40 சதவீத கடைகள் நேற்று திறக்கப்பட்டன.
ஊரடங்கு நிபந்தனைகள் தளர்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 40 சதவீத கடைகள் திறக்கப்பட்டன
Published on

கிருஷ்ணகிரி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதின் காரணமாக ஊரடங்கு மேலும் 14 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள பகுதிகளில் சில நிபந்தனைகளை தளர்த்தி கடைகளை திறக்க அரசு அறிவித்தது.

அதன்படி கொரோனா பாதிப்பு இல்லாத கிருஷ்ணகிரி மாவட்டம் பச்சை மண்டலமாக இருப்பதால், சில நிபந்தனைகளுடன் நேற்று முதல் கடைகள் திறக்கப்பட்டன. அந்த வகையில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மளிகை கடைகள், காய்கறி கடைகள், செல்போன் விற்பனை மற்றும் பழுது பார்க்கும் கடைகள், பேன்சி கடைகள், எலக்ட்ரிக் பொருட்கள் விற்பனை கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள் திறக்கப்பட்டன. உணவகங்களில் பார்சல் மட்டுமே வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் திறக்கப்பட்டன.

அதே நேரத்தில் மாவட்டத்தில் டீக்கடைகள், ஜூஸ் கடைகள், முடி திருத்தும் கடைகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அந்த வகையில் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுமார் 40 சதவீத கடைகள் திறக்கப்பட்டன. அதே நேரத்தில் ஏ.சி. வசதியுடன் கூடிய நகைக்கடைகள், துணிக்கடைகள், மால்கள், வணிக வளாகங்கள், பல்பொருள் அங்காடிகளை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை.

40 நாட்களுக்கு பிறகு நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சாலைகளில் அதிக அளவில் மக்கள் சென்றதை பார்க்க முடிந்தது. அவர்களில் பெரும்பாலானவர்கள் முககவசம் அணிந்து சென்றனர். முககவசம் அணியாமல் சென்ற சிலரை போலீசார் எச்சரித்து அனுப்பினார்கள்.

ஓசூரில், மளிகை கடைகள், ஓட்டல்கள், பேக்கரி மற்றும் இனிப்பு கடைகள், கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள், எலக்ட்ரானிக் மற்றும் உதிரி பாக கடைகள், டீக்கடைகள், செல்போன் கடைகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு விற்பனை மும்முரமாக நடைபெற்றது. மாலை 5 மணி வரை கடைகள் முழுமையாக திறக்கப்பட்டதால், ஓசூர் எம்.ஜி. ரோடு, பாகலூர் ரோடு, நேதாஜி ரோடு ஆகிய முக்கிய பகுதிகளில் மக்கள் கூட்டம் அலை மோதியது. மக்கள் முக கவசம் அணிந்தவாறு நடந்து சென்றும், இரு சக்கர வாகனங்களில் வந்தும் தங்களுக்கு தேவையான பொருட்களை கடைகளில் நீண்ட வரிசையில் நின்று, சமூக இடைவெளியை கடைபிடித்தவாறு வாங்கிச்சென்றனர். மாலையில் குறிப்பிட்ட நேரத்தில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டதால், சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டு, ஊரே நிசப்தமாக காட்சியளித்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com