மும்பையில் ஊரடங்கு நீட்டிப்பு; வெளிமாநில தொழிலாளர் பிரச்சினை குறித்து பிரதமருடன் நாளை ஆலோசனை - சுகாதார மந்திரி தகவல்

மும்பை, புனேயில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும், வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்புவது குறித்து நாளை பிரதமர் மோடியுடன் ஆலோசனை நடத்தப்படும் என்றும் மராட்டிய சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே தெரிவித்தார்.
மும்பையில் ஊரடங்கு நீட்டிப்பு; வெளிமாநில தொழிலாளர் பிரச்சினை குறித்து பிரதமருடன் நாளை ஆலோசனை - சுகாதார மந்திரி தகவல்
Published on

மும்பை,

உயிர்கொல்லி கொரோனா வைரஸ் எதிரொலியாக நாடு முழுவதும் கடந்த 24-ந் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மராட்டியத்தில் ஒரு நாள் முன்னதாகவே கடந்த மாதம் 23-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்தநிலையில், கடந்த 14-ந் தேதி நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி ஆற்றிய உரையில், நாடு முழுவதும் மே 3-ந் தேதி ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார்.

ஏப்ரல் 20-ந் தேதிக்கு பிறகு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்றும் கூறியிருந்தார்.

இதன்படி நாட்டிலேயே கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்டு, அதிகளவில் உயிரிழப்புகளை சந்தித்து வரும் மராட்டியத்தில் வீழ்ச்சி அடைந்து இருக்கும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் நடவடிக்கையாக கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாத மற்றும் அந்த பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் தொழிற்சாலைகள் செயல்படவும், வணிக நடவடிக்கைகளை தொடங்கவும் மாநில அரசு அனுமதி அளித்தது.

கடைகளை திறக்க அனுமதி

கொரோனா அரக்கனின் கோர பிடியில் சிக்கி தவிக்கும் மும்பை, புனே பெருநகரங்களில் மெட்ரோ ரெயில் பணி மற்றும் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது.

மாநிலத்தில் ஊரடங்கு காரணமாக அத்தியாவசிய சேவைகளான பால், மளிகை பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்பட்டு இருக்கின்றன. இந்த சூழலில், கொரோனா பாதிப்பு அதிகம் இல்லாத பகுதிகளில் அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகளையும் திறந்து கொள்ள மத்திய அரசு நேற்று அனுமதி வழங்கியது.

ஆனால் மராட்டியத்தில் அந்த கடைகளை திறப்பது தொடர்பாக மாநில அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை.

மந்திரி தகவல்

இது தொடர்பாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியதாவது:-

கடைகளை மீண்டும் திறப்பது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவில் எந்த தெளிவும் இல்லை.

எனவே கடைகளை திறக்கும் மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு குறித்து நாங்கள் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. இதன் காரணமாக மராட்டியத்தில் மே 3-ந் தேதி வரை ஊரடங்கு விதிகளில் எந்த தளர்வும் இருக்காது.

பிரதமருடன் ஆலோசனை

திங்கட்கிழமை(நாளை) பிரதமருடன் அனைத்து மாநில முதல்-மந்திரிகள் வீடியோ கான்பரன்சிங் கலந்துரையாடலின் போது, கடைகள் திறப்பு மற்றும் மாநிலத்தில் தவிக்கும் வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் பிரச்சினை குறித்து பேசுவோம். அதன்பிறகு எங்களுக்கு கூடுதல் தெளிவு கிடைக்கும்.

பொருளாதாரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகள் தொடங்கப்பட வேண்டும். பசுமை மண்டலங்களுக்கு சீல் வைத்து தொழில்துறை நடவடிக்கைகளை அனுமதிப்பதற்கு அரசு பரிசீலனை செய்து வருகிறது.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட மும்பை, புனே போன்ற சிவப்பு மண்டலங்களில் ஊரடங்கை நீட்டிக்கலாமா அல்லது வேண்டாமா என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.

சிவப்பு மண்டலங்களில் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகள் மட்டும் சீல் வைக்கப்பட வேண்டுமா அல்லது முழு மண்டலத்திற்கும் ஊரடங்கை நீட்டிக்க வேண்டுமா என்பதையும் பார்க்க வேண்டும். இது தொடர்பாக தீவிரமாக ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com