ஊரடங்கு உத்தரவு மேலும் தளர்வு: சேலத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன

ஊரடங்கு உத்தரவு மேலும் தளர்வு எதிரொலியாக சேலத்தில் நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. சாலைகளில் வாகன போக்குவரத்து அதிகரித்து நெரிசல் ஏற்பட்டது.
ஊரடங்கு உத்தரவு மேலும் தளர்வு: சேலத்தில் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன
Published on

சேலம்,

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த ஊரடங்கு 45 நாட்களை கடந்து உள்ளதால் சில கட்டுப்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் தளர்த்தி வருகின்றன.

வழக்கமாக காய்கறி மற்றும் மளிகை கடைகள் மட்டும் அத்தியாவசிய தேவைக்காக திறக்கப்பட்டு இருந்தது. தற்போது தமிழகத்தில் கூடுதலாக 34 வகை கடைகளை திறக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்பட்டதால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

34 வகை கடைகள்

சேலம் மாவட்டத்தை பொறுத்தவரையில் டீக்கடைகள், பெட்டி கடைகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள், எலக்ட்ரிக்கல் கடை, பர்னிச்சர் கடை, ஓட்டல்கள், பேக்கரிகள், பழக்கடைகள், கட்டுமான பொருட்கள் கடைகள், மின்சாதன பொருட்கள் விற்கும் கடைகள், வாகனங்கள் பழுதுபார்ப்பு கடைகள் உள்ளிட்ட 34 வகை கடைகள் திறக்கப்பட்டன.

பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டதால் சாலைகளில் பொதுமக்களின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியது என்றே கூறலாம். அதே சமயம் கொரோனா நோயாளிகள் வசித்த, தடை செய்யப்பட்ட பகுதிகளில் செயல்படும் அனைத்து கடைகளும் நேற்று காலை திறக்கப்படவில்லை.

முக கவசம் அணிந்து

சேலம் மாநகரில் நேற்று சுமார் 80 சதவீத டீக் கடைகள் திறக்கப்பட்டன. அதிலும் பார்சலில் மட்டும் விற்பனை செய்யப்பட்டது. கடை முன்பு நின்று டீக்குடிக்க யாரையும் அனுமதிக்கவில்லை. இதனால் டீக்கடைகளில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. பஸ்கள் ஓடாத காரணத்தால் பெரிய கடைகளில் வேலைக்கு போதிய ஆட்கள் வரவில்லை. பேக்கரிகளில் பார்சல் வியாபாரம் களைகட்டியது. சமூக இடைவெளியை கடைபிடித்து வியாபாரம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதால் பொதுமக்கள் வரிசையில் நின்று தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர்.

அதேபோல் கடைகளுக்கு வந்திருந்த அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர். டீ, காபி கடைகள் காலை 6 மணிக்கு திறந்து இரவு 7 மணிக்கு மூடப்பட்டன. மற்ற கடைகள் அனைத்தும் வழக்கம்போல் காலை 10 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 7 மணி வரை செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. சேலத்தில் கடைகள் திறக்கப்பட்டதால் சாலைகளில் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் அதிகளவில் சென்று வந்தனர். இதனால் சில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அதேசமயம் முக கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை போலீசாரும், மாநகராட்சி அதிகாரிகளும் மடக்கிப்பிடித்து அபராதம் விதித்து வசூலித்தனர்.

லீ பஜார், செவ்வாய்பேட்டை

சேலத்தில் வர்த்தக கேந்திரமாக விளங்கக் கூடிய செவ்வாய்பேட்டை, லீ பஜார் பகுதிகளில் நேற்று காலை பொதுமக்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. பின்னர் அவர்கள் தேவையான அத்தியாவசிய பொருட்களை மளிகை கடைகளில் வாங்கி சென்றனர். ஒரு சில கடை உரிமையாளர்கள் வருகிற 17-ந் தேதிக்கு பிறகு மத்திய, மாநில அரசுகளின் முடிவுகளை பார்த்த பிறகே தங்களது கடைகளை முழுமையாக திறப்பது என முடிவு செய்துள்ளனர். சேலத்தில் பெரும்பாலான கடைகள் நேற்று திறக்கப்பட்டதையொட்டி அஸ்தம்பட்டி, 4 ரோடு, 5 ரோடு, சாரதா கல்லூரி சாலை, புதிய பஸ் நிலையம், சூரமங்கலம், பழைய பஸ் நிலையம், திருச்சி ரோடு, அன்னதானபட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வாகன போக்குவரத்து அதிகமாக காணப்பட்டது.

சேலம் மாநகரில் 45 நாட்களுக்கு பிறகு ஒரு சில கடைகளை தவிர பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டதாலும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பியதாலும் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com