கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு: மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய சாலைகள் நோணாங்குப்பம் படகுகுழாம் மூடல்

கொரோனா கட்டுப்படுத்த ஊரடங்கு விதிக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. நோணாங்குப்பம் படகுகுழாம் மூடப்பட்டது.
கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு: மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடிய சாலைகள் நோணாங்குப்பம் படகுகுழாம் மூடல்
Published on

அரியாங்குப்பம்,

புதுவையில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்களுக்கு தளர்வுகளுடன் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அத்தியாவசிய கடைகள், மருந்தகங்கள் மட்டும் திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் 2-வது நாளான நேற்று ஞாயிற்றுக்கிழமை என்றபோதிலும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

அரியாங்குப்பம் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன. சுற்றுலா தலமான நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் மூடப்பட்டது. இதற்காக நுழைவு வாயில் மூடப்பட்டது. சுற்றுலா பயணிகள் வராததால் படகுழாம் வெறுமனே காணப்பட்டது. எப்போதும் பரபரப்பாக காணப்படும், சுண்ணாம்பாறு பாலம் போக்குவரத்து இன்றி காணப்பட்டது.

மகாவீர் ஜெயந்தி அனுசரிக்கப்பட்ட நிலையில் அரசு உத்தரவை மீறி ஒரு சில இறைச்சி கடைகள் திறந்தே இருந்தது. அரியாங்குப்பம் புறவழிச்சாலையில் தடுப்புகள் அமைத்து போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அனாவசியமாக சுற்றித்திரிந்தவர்களை போலீசார் எச்சரித்தனர்.

திருவண்டார்கோவில், திருபுவனை, மதகடிப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. அந்த பகுதியில் இருந்த ஒரு சில கடைகள் மட்டும் திறந்து இருந்தன. பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வாங்கிச் சென்றனர்.

போலீசார் ஆங்காங்கே சோதனையில் ஈடுபட்டனர். வாகனங்கள் மற்றும் முகக்கசவம் அணியாமல் வந்தவர்களை பிடித்து அபராதம் விதித்ததுடன், எச்சரிக்கை செய்து அனுப்பினர். திருபுவனை பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கவில்லை, இதனால் பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

வில்லியனூர் பகுதியில் 40 சதவீத கடைகள் திறந்திருந்தன. மகாவீர் ஜெயந்தியையொட்டி நேற்று இறைச்சி கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இந்த உத்தரவை காற்றில் பறக்கவிட்டதுபோல் வில்லியனூர், சுல்தான்பேட்டை, கூடப்பாக்கம், உருவையாறு, கோர்க்காடு, கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் இறைச்சி கடைகள் வழக்கம்போல் செயல்பட்டன. இறைச்சி வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.

பாகூர், கிருமாம்பாக்கம், தவளக்குப்பம் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடிய காணப்பட்டன. தடை உத்தரவை மீறி கன்னியகோவில் பகுதியில் செயல்பட்ட ஒரு சலூன் கடை மீது கிருமாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தவளக்குப்பம் பகுதியில் கடலூர்-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் பேரிகார்டு வைத்து போலீசார் தடுப்பு அமைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com