ஊரடங்கால் காய்கறிகள் விலை வீழ்ச்சி அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்

ஊரடங்கால் காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்து உள்ளதால் விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். அவற்றை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.
ஊரடங்கால் காய்கறிகள் விலை வீழ்ச்சி அரசே கொள்முதல் செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
Published on

கயத்தாறு,

இந்தியாவின் முதுகெலும்பாக விவசாயம் உள்ளது. விவசாயத்துக்கு தேவையான தண்ணீர் தட்டுப்பாடு, இடுபொருட்கள் விலை ஏற்றம், விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காதது போன்றவை காரணமாக, முன்பு பெரும்பாலானவர்கள் விவசாயம் செய்வதற்கு முன்வராமல் மாற்று தொழிலுக்கு சென்றனர்.

தற்போது உலகத்துக்கே பசியாற்றும் விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த பலரும் இயற்கை உரங்களை பயன்படுத்தியும், சொட்டுநீர் பாசனம் மூலமும், அரசின் மானியங்களை பெற்றும் ஆர்வமுடன் விவசாயம் செய்து வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் கிணற்று பாசனம் மூலம் கத்தரிக்காய், வெண்டைக்காய், பாகற்காய், வெள்ளரிக்காய், தர்பூசணி, அவரைக்காய், கறிவேப்பிலை, கீரை வகைகள், எலுமிச்சை, மா, கொய்யா போன்றவற்றை பயிரிட்டு உள்ளனர். பெரும்பாலான காய்கறி பயிர் வகைகள் 3 மாதம் முதல் 6 மாதத்துக்குள் விளைச்சலை தருகிறது.

வானம் பார்த்த கரிசல் பூமியான கயத்தாறு பகுதி வழியாக உப்பாறு பாய்கிறது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், திருவேங்கடம் பகுதிகளில் பெய்யும் மழைநீரானது காட்டாற்று வெள்ளமாக சேர்ந்து உப்பாறு, சிற்றாறு வழியாக நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் தாமிரபரணி ஆற்றில் சங்கமிக்கிறது. கடந்த ஆண்டு போதிய பருவமழை பெய்ததால், கயத்தாறு பகுதியில் உள்ள அனைத்து குளங்களிலும் தண்ணீர் உள்ளது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் காய்கறி பயிர் வகைகளை பயிரிட்டு உள்ளனர்.

கயத்தாறு பகுதியில் விளைந்த காய்கறிகளை நெல்லை, கோவில்பட்டி, தூத்துக்குடி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மார்க்கெட்டுகளுக்கு தினமும் லாரிகளில் நூற்றுக்கணக்கான மூட்டைகளில் அனுப்பி வந்தனர். இதன்மூலம் பல ஆயிரக்கணக்கான விவசாயிகள், தொழிலாளர்கள் பயன் அடைந்தனர்.

இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இதில் விவசாய பணிகளுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. எனினும் பெரும்பாலான தொழிலாளர்கள் விவசாய பணிகளுக்கு செல்லாததால், குடும்ப உறுப்பினர்களே காய்கறிகளை அறுவடை செய்கின்றனர்.

மேலும் அறுவடை செய்த காய்கறிகளை கொள்முதல் செய்வதற்கு போதிய வியாபாரிகள் முன்வராததால், அவற்றை குறைந்த விலைக்கே உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்கும் நிலை உள்ளது. இதனால் விளைபொருட்களுக்கு போதிய விலை கிடைக்காமல், விவசாயிகள் நஷ்டம் அடைந்து உள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கண்ணீர்மல்க கூறியதாவது:-

ஊரடங்கு காரணமாக தொழிலாளர்கள் பற்றாக் குறை, போக்குவரத்து பாதிப்பு போன்ற காரணங்களால், விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கே காய்கறிகளை வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். குறைவான நேரமே மார்க்கெட்டுகளிலும் காய்கறிகளை விற்பதால், அவை தேக்கம் அடைகின்றன.

மேலும் ஊரடங்கு காலத்தில் அத்தியாவசிய பணிகள் மட்டுமே நடக்கிறது. கோவில் விழாக்கள், சுப நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறவில்லை. இதனால் காய்கறிகளின் தேவைப்பாடும் வெகுவாக குறைந்து உள்ளது. காய்கறிகள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால், பெரும்பாலான விவசாயிகள் காய்கறிகளை அறுவடை செய்யாமல் கால்நடைகளுக்கு தீவனமாக்கும் நிலை உள்ளது.

எனவே, கயத்தாறு பகுதியில் விளைவிக்கப்படும் காய்கறிகளை அரசு நேரடியாக கொள்முதல் செய்து, கூட்டுறவு அங்காடி மூலம் விற்பனை செய்யவேண்டும். மேலும் குளிர்பதன கிடங்கில் காய்கறிகளை சேமித்து வைத்து, அனைத்து பகுதிகளுக்கும் விற்பனைக்கு அனுப்ப ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com