

கடலூர்,
கடலூர் அருகே உள்ள புதுக்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்தையன். இவரது மகன் முத்தரசன் (வயது 22). பெங்களூருவில் கேட்டரிங் வேலை பார்த்து வந்தார். கொரோனா காரணமாக தற்போது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த இவரது நண்பர் பிரதாப் (22). நெட்டப்பக்கத்தில் தனியார் கம்பெனி ஒன்றில் வேலை செய்து வருகிறார்.
முத்தரசன் வில்லியனூரில் வசித்து வரும் தனது உறவினரை பார்ப்பதற்காக பிரதாப்புடன் மோட்டார் சைக்கிளில் சென்றார். இதற்கிடையே மழை பெய்ததால் புதுக்குப்பம் திரும்பினர்.
சந்திக்குப்பம் அருகே வந்தபோது பின்னால் 3 மோட்டார் சைக்கிளில் அதிவேகமாக 7 பேர் வந்தனர். பிரதாப், முத்தரசன் ஆகியோர் வந்த மோட்டார் சைக்கிளில் மோதுவது போல் வந்ததாக தெரிகிறது.
இதனை முத்தரசன் தட்டிக் கேட்டபோது இருதரப்பினரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆத்திரமடைந்த 7 பேர் கொண்ட கும்பல் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் முத்தரசனை வெட்டினார்கள். மேலும் 2 நாட்டு வெடிகுண்டுகளை வீசி விட்டு அவர்கள் தப்பிச் சென்றனர்.
இந்த சம்பவத்தில் முத்தரசனுக்கு இடது காலில் வெட்டு விழுந்தது. பிரதாப் லேசான காயமடைந்தார். அவர் புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்து ரெட்டிச்சாவடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்கள். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு வீசி தப்பிச் சென்ற 7 பேர் கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். கடந்த 30-ந் தேதி கீழ்குமாரமங்கலம் மலட்டாறு பகுதியில் ரவுடி கும்பல் நாட்டு வெடிகுண்டுகளை வீசி மோதிக்கொண்டது. இதில் 10-க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். இந்த பதற்றம் தனிவதற்குள் மீண்டும் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் கடலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.