தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; 3 பேர் கைது மேலும் ஒருவருக்கு வலைவீச்சு

தனது சகோதரியை அடிக்கடி சந்தித்து தொந்தரவு செய்த தொழிலாளியை நண்பர்களுடன் சேர்ந்து வெட்டியவர் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு; 3 பேர் கைது மேலும் ஒருவருக்கு வலைவீச்சு
Published on

பூந்தமல்லி,

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த துளசாபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கர் (வயது 32). பூந்தமல்லி அடுத்த பாப்பான்சத்திரம், பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார்களை வாட்டர் சர்வீஸ் செய்யும் கடையில் வேலை செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று கடைக்கு காரில் வந்து இருந்து இறங்கிய 4 பேர் சங்கரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டிருந்தனர்.

அப்போது திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளால் சங்கரை சரமாரியாக வெட்டினார்கள். இதில் சங்கரின் கை, முதுகு, தலை பகுதிகளில் வெட்டு விழுந்தது.

இதையடுத்து அந்த மர்ம நபர்கள் காரில் தப்பிச் சென்றனர். இதனை கண்டதும் கடையில் இருந்த மற்ற ஊழியர்கள் சங்கரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். இதுகுறித்து நசரத்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் நசரத்பேட்டை இன்ஸ்பெக்டர் இளங்கோ தலைமையில் தனிப்படைகள் அமைத்து சங்கரை வெட்டி விட்டு சென்ற மர்ம நபர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

இதில் பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு பகுதியை சேர்ந்த ஜெகன்(25), அவரது நண்பர்கள் பாக்கியராஜ் (39), குமார் (27) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், சங்கர் வீட்டின் அருகில் ஜெகனின் அக்கா மேகலா வசித்து வருகிறார். அதில் சங்கருக்கும், மேகலாவிற்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மேகலா சங்கரை விட்டு விலகிச் சென்று விட்டதாகவும், இதையடுத்து சங்கர் மீண்டும், மீண்டும் மேகலாவிற்கு தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் மேகலா தனது தம்பியான ஜெகனிடம் இதுபற்றி கூறினார். இதன் காரணமாக ஆத்திரமடைந்த ஜெகன் தனது நண்பர்களுடன் சென்று சங்கரை வெட்டி இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, இவர்களிடமிருந்த கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காருடன் தலைமறைவான லோகேஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com