திருமணிமுத்தாறு தரைப்பாலத்தை மூழ்கடித்த சாயக்கழிவு நுரை போக்குவரத்து பாதிப்பு

வெண்ணந்தூர் அருகே மழைநீருடன் சாயக் கழிவு நீர் கலந்து வந்ததால் திருமணிமுத்தாறு தரைப்பாலத்தில் 10 அடி உயரத்துக்கு நுரை சூழ்ந்து மூழ்கடித்தது. இதனால் அந்த பாலத்தின் வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருமணிமுத்தாறு தரைப்பாலத்தை மூழ்கடித்த சாயக்கழிவு நுரை போக்குவரத்து பாதிப்பு
Published on

வெண்ணந்தூர்,

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே மதியம்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். சேலம் மாவட்டம், சேர்வராயன் மலை பகுதியில் இருந்து வரும் மழைநீர், சேலம் நகரில் திருமணிமுத்தாறாக ஓடி, பூலாவரி, ஆட்டையாம்பட்டி, கட்டிபாளையம் வழியாக மதியம்பட்டி ஏரிக்கு செல்கிறது.

பின்னர் அங்கிருந்து தரை பாலத்தை கடந்து அக்கரைப்பட்டி ஏறி சவுதாபுரம் ஏரி வழியாக சென்று பரமத்தி அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது. மதியம்பட்டி ஏரி மூலமாக மாமுண்டி, மல்லசமுத்திரம் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 500 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பயன்பெற்று வந்தன.

இதனிடையே நேற்று முன்தினம் இரவு சேலம் மாவட்டத்தில் பலத்த மழை பெய்தது. இதன்காரணமாக சேர்வராயன் மலையில் இருந்து பெருக்கெடுத்து வந்த மழைநீர் திருமணிமுத்தாறு வழியாக சென்றது. அதே நேரத்தில் தாதகாப்பட்டி, கொண்டலாம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள சலவை கூடங்களில் இருந்து சாயக்கழிவு நீரை, திருமணிமுத்தாற்றில் சிலர் கலந்து விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மழைநீருடன் ரசாயன கலவை மற்றும் சாக்கடை கழிவுநீரும் கலந்து வந்தது. இதனால் மதியம்பட்டி தரைப்பாலத்தில் அதிகளவு நுங்கும், நுரையுமாக ரசாயன கலவை தண்ணீர் வழிந்தோடியது. ஒரு கட்டத்தில் அந்த பாலம் முழுவதும் 10 அடி உயரத்துக்கு நுங்கும், நுரையுமாக சூழ்ந்து மூழ்கடித்தது.

இதன்காரணமாக மல்லசமுத்திரம்-மதியம்பட்டி சாலை துண்டிக்கப்பட்டு வாகனங்கள் செல்ல முடியாதவாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. குறிப்பாக நேற்று அதிகாலை 2 மணியில் இருந்து காலை 11 மணி வரை இங்கு நுரை மண்டலமாக காட்சி அளித்ததால் வாகன ஓட்டிகள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள் செல்லமுடியால் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர்.

அதன்பிறகு தண்ணீர் வடிந்ததை அடுத்து நுரை குறைந்து அந்த பாதையில் போக்குவரத்து தொடங்கியது. இந்த அசுத்த நீரினால் அந்த பகுதியில் உள்ள விவசாய நிலங்களில் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், நீர்ஆதாரமும் கெட்டுபோகும் அபாயம் உள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

திருமணிமுத்தாற்றில் மழைக்காலங்களில் திடீரென ஏற்படும் வெள்ளப்பெருக்கால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் விவசாய நிலமும் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளது. குறிப்பாக சாயக்கழிவு நீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. இதனால் இப்பகுதியில் விவசாய நிலங்களில் ரசாயனம் கலந்த தண்ணீர் புகுவதால் மண்ணின் தரம் பாதிக்கப்படு கிறது.

இந்த மதியம்பட்டி தரைப்பாலம் வழியாக உயர்மட்ட பாலம் அமைப்பதற்கு மாவட்ட நிர்வாகம் கடந்த 10 மாதத்துக்கு முன்பு மண் பரிசோதனை செய்தது. ஆனால் இதுவரை உயர்மட்ட பாலம் அமைப்பது சம்பந்தமாக எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே மாவட்ட நிர்வாகம் பொதுமக்களின் சிரமத்தை கவனத்தில் கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயத்தையும், நீர்நிலைகளையும் காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர்கள் புகார் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com