

நாகர்கோவில்,
தமிழ்நாடு அனைத்து கலைஞர்கள் நல இயக்க நிர்வாகிகள் கோலப்பன், தாஸ், ராஜேந்திரன், சிறப்பு ஆலோசகர் கருங்கல் ஜார்ஜ் உள்பட பலர் நேற்று நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:
குமரி மாவட்டத்தில் பரவலாக நாடக நடிகர்கள், நடிகைகள், கலைஞர்கள், இன்னிசை பாடகர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் ஏழை மற்றும் நடுத்தர வர்க்கத்தினர். கோவில்கள், ஆலயங்கள் மற்றும் விழாக்களில் இவர்கள் தங்களது பங்களிப்பை செய்து அதன்மூலம் கிடைத்து வந்த வருவாயை வைத்து குடும்ப வாழ்க்கையை நடத்தி வந்தனர். நாடகங்கள் மூலம் சமுதாய விழிப்புணர்வு, மதநல்லிணக்கம், குடும்ப ஒற்றுமை, கல்வி மேம்பாடு ஆகிய கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வந்தது. இரவு 10 மணிக்கு மேல் நாடகங்கள், இன்னிசை கச்சேரிகள் நடத்தக்கூடாது என்று உத்தரவு பிறப்பித்ததின் காரணமாக, குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கலைஞர்கள் மற்றும் இன்னிசை பாடகர் குழுவினர், அவர்களது குடும்பத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இத்தொழிலை நம்பி வாழ்ந்து வந்த இக்குடும்பத்தினர் கடந்த 1 வருட காலமாக வருவாயை இழந்து கஷ்டப்பட்டு வருகின்றனர். எனவே இப்பிரச்சினையை கனிவுடன் பரிசீலித்து கோவில்கள், ஆலயங்கள் மற்றும் விழாக்களில் இரவு 10 மணிக்கு மேல் நாடகங்கள், இன்னிசைக் கச்சேரிகள் நடத்திட ஆணை பிறப்பித்து, பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி செய்திட கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.