பள்ளி மாணவ, மாணவிகளின் ஆபத்தான ஆட்டோ பயணம்

திண்டுக்கல்லில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் ஆட்டோக்களில் பயணம் செய்வது தடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பள்ளி மாணவ, மாணவிகளின் ஆபத்தான ஆட்டோ பயணம்
Published on

திண்டுக்கல்:
திண்டுக்கல்லில் பள்ளி மாணவ-மாணவிகள் ஆபத்தான முறையில் ஆட்டோக்களில் பயணம் செய்வது தடுக்கப்படுமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள்
திண்டுக்கல் நகரில் அரசு, தனியார் பள்ளிகள் என 105 பள்ளிகள் உள்ளன. இவற்றில் 50 ஆயிரம் மாணவ-மாணவிகள் பயின்று வருகின்றனர். இதற்காக திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த மாணவ-மாணவிகள் பஸ்களில் பள்ளிக்கு வருகின்றனர். இதேபோல் ஒரே பகுதியை சேர்ந்த மாணவ-மாணவிகள் மொத்தமாக வேனில் வருகின்றனர்.
அதேநேரம் திண்டுக்கல் நகரை சேர்ந்த 8-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்கள் பலர் சைக்கிளில் பள்ளிக்கு செல்கின்றனர். ஆனால் மாணவிகளை பெறுத்தவரை தாய் அல்லது தந்தையோடு வாகனங்களில் செல்கின்றனர். இதுபோன்ற வசதி இல்லாத மாணவ-மாணவிகள் பள்ளிக்கு ஆட்டோக்களில் தான் செல்ல வேண்டியது இருக்கிறது. இதற்காக ஆட்டோக்களுக்கு மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையை கட்டணமாக செலுத்துகின்றனர்.
ஆட்டோவில் பயணம்
இதில் ஒருசில ஆட்டோக்களில் அளவோடு மாணவ-மாணவிகளை ஏற்றி செல்கின்றனர். அவ்வாறு குறைந்த எண்ணிக்கையில் மாணவர்களை ஏற்றி செல்லும் ஆட்டோக்களுக்கு கட்டணம் அதிகமாக வசூலிக்கப்படுகிறது. அதேநேரம் அதிகமான மாணவர்கள் செல்லும் ஆட்டோக்களுக்கு கட்டணம் குறைவாக பெறப்படுகிறது. இதனால் வேலைக்கு செல்லும் சாதாரண, நடுத்தர பெற்றோர் தங்களுடைய குழந்தைகளை ஆட்டோக்களில் அனுப்பி வைக்கின்றனர்.
இதை சாதகமாக பயன்படுத்தி கொண்டு ஒருசில ஆட்டோக்களில் அளவுக்கு அதிகமாக மாணவ-மாணவிகளை ஏற்றி செல்கின்றனர். சில ஆட்டோக்களில் மூட்டைகளை அடுக்குவது போன்று மாணவர்கள் ஏற்றப்படுகின்றனர். மாணவர்களின் புத்தக பைகள், மதிய உணவு பைகள் ஆங்காங்கே தொங்க விடப்படுகின்றன. அவை ஆட்டோவுக்கு வெளியே ஒரு அடி நீளம் வரை நீட்டியபடி தொங்குகிறது.
ஆபத்தான முறையில்...
இதுமட்டுமின்றி ஒருசில ஆட்டோக்களில் மாணவர்கள் இருக்க கூட இடமின்றி நெருக்கியடித்து கொண்டு அமர்ந்து செல்கின்றனர். டிரைவர்களின் இருக்கையில் அமர்ந்தபடியும் மாணவர்கள் பயணிக்கும் காட்சியை திண்டுக்கல் நகரில் பார்க்க முடிகிறது.
இதுபோன்று ஆபத்தான முறையில் ஆட்டோக்களில் அமர்ந்து மாணவ-மாணவிகள் பயணம் செய்கின்றனர். மேலும் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் மாணவ-மாணவிகளை ஏற்றி செல்ல வேண்டியது இருப்பதால், ஒருசில ஆட்டோக்கள் மின்னல் வேகத்தில் செல்கின்றன.
இது விபத்துக்கு வழிவகுத்து விடும் அபாயம் உள்ளது. இதை தடுக்க போலீசாரும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேநேரம் மாணவ-மாணவிகள் ஆட்டோக்களில் எவ்வாறு செல்கிறார்கள் என்பதை அறிந்து பெற்றேர் மாற்று ஏற்பாடு செய்தால் ஆபத்தை தடுக்கலாம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com