குமரி மாவட்டத்தில் ஆறு, குளங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்

குமரி மாவட்டத்தில் ஆறு, குளங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
குமரி மாவட்டத்தில் ஆறு, குளங்களில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்
Published on

கன்னியாகுமரி,

இந்த ஆண்டு ஆடி அமாவாசை நேற்று கடைபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருவதாலும், நோய் பரவும் அபாயம் உள்ளதாலும் பொதுமக்கள் யாரும் நீர் நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டது.

இதனால் வழக்கமாக பொதுமக்கள் தர்ப்பணம் கொடுக்கும் கன்னியாகுமரி, குழித்துறை தாமிரபரணி ஆறு பகுதி வெறிச்சோடி காணப்பட்டது.

ஆறு, குளம்

கன்னியாகுமரி கடற்கரைக்கு செல்ல முடியாததால் ஏராளமான பொதுமக்கள் சோழன்திட்டை அணைபகுதி, சுசீந்திரம், நரிக்குளம் போன்ற பகுதிகளில் உள்ள ஆறு, குளங்களில் தடையை மீறி குவிந்து புனித நீராடினர். தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களை எச்சரித்து திருப்பி அனுப்பினர். சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் தெப்பக்குளத்திலும் பக்தர்கள் தர்ப்பணம் கொடுத்தார்கள்.

ஏராளமான இந்துக்கள் நேற்று வீட்டிலேயே குளித்து தங்களது முன்னோர்களை நினைத்து தர்ப்பணம் கொடுத்தனர். முன்னோர்களின் படங்களுக்கு மாலை அணிவித்து பூஜை செய்து, வடை பாயாசத்துடன் உணவு பதார்த்தங்களை படைத்து வைத்து வழிபட்டனர்.

குழித்துறை- நாகர்கோவில்

குழித்துறை தாமிரபரணி ஆற்றின் கரையில் உள்ள வாவுபலி மைதானத்தில் ஆண்டுதோறும் ஏராளமானோர் கூடி புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். அன்றைய தினம் இங்கு வாவுபலி பொருட்காட்சியும் நடைபெறும். இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக குழித்துறை தாமிரபணி ஆற்றில் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டது. அத்துடன் வாவுபலி பொருட்காட்சியும் ரத்து செய்யப்பட்டது. இதனால், அங்கும் பக்தர்கள் யாரும் வரவில்லை. ஆற்றின் கரைக்கு பொதுமக்கள் யாரும் செல்லாதவாறு போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

நாகர்கோவில் ஒழுகினசேரி ஆராட்டு ரோடு பகுதியில் உள்ள பழையாற்றில் நேற்று காலை மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நான்கைந்து பேர், நான்கைந்து பேராக தனித்தனியாக தர்ப்பணம் செய்து, ஆற்றில் நீராடி சென்றனர். நாகர்கோவில் பகுதியில் உள்ள குமரி அணை, சபரி அணை போன்ற பகுதிகளிலும் பலர் தர்ப்பணம் கொடுத்து விட்டு சென்றனர்.

இதேபோல் மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள ஆறுகள், குளங்கள், வாய்க்கால்கள் போன்றவற்றில் மக்கள் தங்கள் முன்னோர்களை நினைவுகூர்ந்து தர்ப்பணம் கொடுத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com