

கம்பம்:
கம்பம் நகராட்சியில் 4-வது வார்டுக்கு உட்பட்ட ஐசக் போதகர் தெருவில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்த பகுதியில் குடிநீர் வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி, தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மற்றும் பட்டா வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி, வீடுகளில் கருப்புகொடி ஏற்றி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த கம்பம் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, தாசில்தார் அர்ச்சுணன், நகராட்சி பொறியாளர் பன்னீர்செல்வம் மற்றும் ஊழியர்கள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது தாசில்தார் கூறுகையில், தற்போது தேர்தல் நடைமுறை அமலில் உள்ளதால் பட்டா வழங்குவது குறித்து உறுதி வழங்க முடியாது.
தேர்தல் முடிந்தவுடன் பட்டா வழங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தற்போது உள்ளபடியே தார்சாலை அமைக்கப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.