தினம் ஒரு தகவல் : கட்டிடத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஈரப்பதம்

நல்ல காற்றும், சூரிய ஒளியும் உட்புகும் வீட்டை தான் வசிக்க தகுந்ததாக பெரியோர்கள் சொன்னார்கள்.
தினம் ஒரு தகவல் : கட்டிடத்துக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஈரப்பதம்
Published on

வீட்டிற்குள் சூரிய ஒளி படவில்லை எனில் வீடு பாதிப்புக்கு உள்ளாகும் என்பது இதன் உட்கருத்து. ஆனால் இன்று நாம் வீட்டை இடைவெளி இன்றி அடைத்து விடுகிறோம். வெயில் காலத்தில் கூடப் பொருளாதார பாதுகாப்பு கருதி ஜன்னல்களைத் திறப்பதில்லை. குளிர் காலத்திலோ கேட்கவே வேண்டாம். சீல் வைத்து அடைத்து விடுகிறோம்.

குளிர் காலத்திலும், மழைக்காலத்திலும் வீட்டை அடைத்தே வைத்திருப்பதால் வீட்டின் உள்ளே சுழலும் காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கிறது. முறையான வென்டிலேஷன் இல்லை எனில் வீட்டின் ஈரம் உலரவே உலராது. இதனால் கட்டிடம் பாதிக்கப்படும்.

வீட்டின் கூரை மீதும், சுவர்கள் மீதும் நீர் புக அனுமதித்தால், நீர் கட்டிடத்திற்குள் ஊடுருவும். அங்கேயே தங்கிக் கொஞ்சம் கொஞ்சமாகப் கட்டிடத்தைப் பாதிக்கும். வீட்டின் கூரை மீது வீட்டு தேவைக்கான நீர் தொட்டியை அமைக்கிறோம். இதிலிருந்து நீர் கசிந்தால் அது கட்டிடத்தில் தானே ஊடுருவும்.

தண்ணீர் தொட்டியிலிருந்து வீட்டின் பல அறைகளுக்கும் புழக்கத்திற்காக தண்ணீர், குழாய்கள் வழியே செல்லும். இந்தக் குழாய்களில் நீர்க் கசிவு இருந்தால் அது கட்டிடத்தின் சுவர்களில் இறங்கும். சில சமயங்களில் நீர்க் கசிவு சுவரில் வெளிப்படும். சில சமயங்களில் வெளியே நீர் பரவுவது தெரியாமலேயே சுவர்களின் உள்ளே நீர் தங்கும். இது சுவரை அரிக்கும்.

சாதாரணமாக, வீட்டில் புழங்கும் தண்ணீர் காரணமாக தினமும் 20 லிட்டர் நீர் வீட்டின் உள்ளே நிலவும் தட்பவெப்பத்தில் கலக்கிறது. இந்த நீரானது ஈரப்பதமாக காற்றில் கலந்திருக்கும். இதனை வெளியேற்றாவிட்டால் அது ஆபத்தை விளைவிக்கும். குளியலறை, சமையலறை போன்றவற்றில் நாம் பயன்படுத்தும் தண்ணீரின் ஒரு பகுதி, இந்த அறைகளில் உள்ள காற்றில் கலந்துவிடும். எனவே குளியலறை, சமையலறை போன்ற இடங்களில் சரியான மின் விசிறிகளை பயன்படுத்தி அந்தக் காற்றை உலர்த்த வேண்டும். அல்லது வெளியேற்ற வேண்டும்.

மழை பெய்யும் போது கட்டிடத்தின் மீது விழும் தண்ணீரை மிகக் கவனமாகக் கையாள வேண்டும். இந்தத் தண்ணீரை மழை நீர் சேகரிப்பு தொட்டிக்கு அனுப்பலாம். ஆனால் இந்த மழை நீர் நேரடியாக நிலத்திற்குள் புகுவதற்கு அனுமதித்தல் கூடாது. அப்படி நேரடியாக நிலத்திற்குள் சென்றால் அது கட்டிடத்தின் அஸ்திவாரத்திற்குள் புகுந்து அரித்துவிடும். இது கட்டிடத்திற்கு ஆபத்தாக முடியும்.

வீட்டிற்கென ஈரமானி ஒன்றை வாங்கி வைத்துக்கொள்வது நலம். இதனால் வீட்டிற்குள் நிலவும் ஈரப்பதத்தை அறிந்துகொண்டு அதற்கேற்றாற் போல் பராமரிப்பு நடவடிக்கை மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். வீட்டிற்குள் ஈரத்துணிகள் போன்றவற்றை உலர்த்துதலைக் கூடுமானவரை தவிர்த்து விட வேண்டும். வீட்டிற்குள் மக்கிப்போன நாற்றம் அடித்தால் உடனே கவனிக்க வேண்டும். ஈரப்பதத்தால் ஆபத்து உள்ளது என்பதன் அறிகுறி தான் அது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com