தினம் ஒரு தகவல் : சிறு நகரங்களிலும் ஷாப்பிங் மால்கள்

பல்வேறு பொருட்களை ஒரே இடத்தில் கிடைக்கச் செய்யும் வழிமுறைதான் ஷாப்பிங் மால்.
தினம் ஒரு தகவல் : சிறு நகரங்களிலும் ஷாப்பிங் மால்கள்
Published on

உலகம் முழுவதும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட ஷாப்பிங் மால்கள் உள்ளன. இந்தியாவில் டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை போன்ற முதல் நிலை நகரங்களில் நாளுக்கு நாள் ஷாப்பிங் மால்கள் பெருகி வருகின்றன.

சென்னையை பொறுத்தமட்டில் சமீப காலத்தில் நவீன வசதிகளுடன் பல ஷாப்பிங் மால்கள் கட்டப்பட்டுள்ளன. இப்போது இந்த ஷாப்பிங் மால்கள் நாட்டில் அடுத்த நிலையில் உள்ள மற்ற நகரங்களிலும் வந்துகொண்டிருக்கின்றன. இது தொடர்பாக பிரபல நிறுவனம் ஒன்று நேரடி ஆய்வை மேற்கொண்டது.

அதன் படி கடந்த வருடங்களில் 300-ல் இருந்து 350 மால்கள் நமது நாட்டில் பல்வேறு நகரங்களில் கட்டப்பட்டுள்ளன. இதில் 75 சதவீத மால்களில் பல கடைகள் காலியாக இருப்பதாக அந்த நிறுவனத்தின் ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. மால்களின் கடைகளை வாடகைக்கு எடுத்திருப்போர் தங்களது தொழில்களை பெரு நகரங்களில் இருந்து நடுத்தர நகரங்களுக்கு மாற்ற உள்ளதாகவும் அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. இம்மாதிரியான நகரங்களில் போட்டிகள் குறைவாக இருக்கும் என கடைக்காரர்கள் நினைப்பதுதான் இதன் முக்கியமான காரணம்.

இரண்டாம் நிலை நகரங்களில் கடையை நடத்த ஆகும் குறைந்த செலவும், அங்கு நிலவும் குறைவான தொழில் போட்டியும் கடைக்காரர்களை கவர்கின்றன. பெருநகரங்களில் மால்கள் அமைந்துள்ள இடத்திற்கு இடையிலான இடைவெளி மிகக் குறைவாக இருக்கின்றன. இந்தக் காரணத்தாலும் முதல் நிலை நகரங்களில் தொழில் போட்டிகள் கூடுதலாக இருக்கின்றன. உதாரணமாக கடந்த 3 வருடங்களில் புனேயில் மட்டும் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் 12 மால்கள் கட்டப்பட்டுள்ளன.

மேலும் முதல் நிலை நகரங்களில் நிலத்தின் விலையும், கட்டுமான செலவும் மிக அதிகமாக இருப்பதால் வாடகை கட்டணமும் அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது. இது மால்களில் கடையை வாடகைக்கு எடுப்பவர்களுக்கு கட்டுப்படி ஆவதில்லை. வருமானம் முழுவதும் வாடகைக்கே செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இம்மாதிரி பல காரணங்களை இந்த ஆய்வு முன்வைக்கிறது. இதனால் சென்னை போன்ற பெரிய நகரங்களில் மேலும் மால்கள் கட்டுவது குறையும் என்றும், அதே நேரத்தில் சிறு நகரங்களில் அதிகரிக்கும் என்கிறார்கள், இந்த ஆய்வை நடத்தியவர்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com