தினம் ஒரு தகவல் : மனிதன் குழுவாக வாழத் தொடங்கியது எப்போது ?

ஆதி மனிதன் விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்க்கை நடத்தினான். இதனால் தனிமனித வாழ்வு மிகப்பெரிய அளவில் இழப்புகளை சந்தித்தது.
தினம் ஒரு தகவல் : மனிதன் குழுவாக வாழத் தொடங்கியது எப்போது ?
Published on

அந்த இழப்பை ஈடுசெய்ய விரும்பிய ஆதி மனிதன் தங்களை அழிவிலிருந்து காப்பாற்றிக் கொள்ள குழுவாகக் கூடி வாழத் தொடங்கினான்.

இந்த கூட்டமைப்பு வாழ்க்கை முறையையே மானிடவியலாளர் இனக்குழு சமூக அமைப்பு என்கின்றனர். தான் சார்ந்த குழுவிற்கு தீங்கு வராமலும், தன் சமூகத்தின் கட்டமைப்பு சீர்கெடாமலும் காப்பதே இக்குழு தலைவனின் முதன்மையான பணியாக இருந்தது.

தனி மனித நிலையில் தன் தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத மனித இனம் குழுவாக செயல்பட்டது. இந்த குழுவில் அனைவரும் சமமாக கருதப்பட்டனர். அதனால் தங்களின் சமூக தளத்தில் வலிமை, அறிவு முதிர்ச்சி என்னும் வகைகளில் உயர் நிலையில் இருந்த ஒருவனையே இனக்குழு தலைவனாக கருதினர். இனக்குழு சமூக அமைப்பு தமிழ் இலக்கியத்தில் திணைகளை அடிப்படையாகக் கொண்டு பகுக்கப்பட்டது. ஆதிகால மக்களின் வாழ்வு குறிஞ்சி நிலமாகிய மலைகளிலிருந்தே தோற்றம் பெற்றிருக்க வேண்டும்.

கலை வளர்ச்சியால் நாகரிக நிலை அடைந்த சமூக அமைப்பு மருதம் திணையில் நிலை பெற்றிருக்கலாம். ஆதி மனிதனை குழு அமைப்பு செயல்பாட்டிற்கு தூண்டியதற்கான காரணம் தனித்து நின்று வெற்றிபெற முடியாத நிலையே ஆகும்.

மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலத்தின் முதற்பொருளாகவே குறிக்கப்படுகிறது. அருவி ஒலித்தல், குரங்குகள் தாவுதல், மயில்கள் விளையாடுதல் என்பன சமூக அமைப்பு தோற்றம் பெற்ற நிலப்பகுதியை குறிக்கின்றன.

ஆதி பொதுவுடைமை அமைப்பான இனக்குழு வாழ்க்கை முறையில் அனைவரும் சமமாக கருதப்பட்டனர். பாகுபாடின்றி பகுத்துண்டு வாழ்ந்தனர். இனக்குழு வாழ்க்கைக்கு இன்றியமையாத பகிர்ந்துண்ணல் என்ற வழக்கம் இனக்குழு மக்களிடையே பொதுவுடைமையை ஏற்படுத்தியது. வேட்டையில் கிடைக்கக் கூடிய பொருட்களை அனைவரும் பகிர்ந்துண்டு மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com