தினம் ஒரு தகவல் : நிலக்கரி சுரங்கங்கள்

இந்தியாவில் மின்சாரம் தயாரிப்பில் 66 சதவீதத்துக்கு காரணமாக இருப்பது நிலக்கரி.
தினம் ஒரு தகவல் : நிலக்கரி சுரங்கங்கள்
Published on

மின்சாரத்தை சந்தோஷமாக பயன்படுத்தும் நாம், அதற்குப் பின்னால் இருக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை, அதனால் நமக்கு ஏற்படும் உடல் கேடுகளைப் பற்றி உண்மையிலேயே அறிந்திருக்கிறோமா என்றால் இல்லை. நிலக்கரி என்றாலே நம்மில் பல பேருக்கு பாடப் புத்தகத்தில் படித்த கார்பன் உடனான ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜனின் கலவையே சட்டென்று ஞாபகத்துக்கு வரும். நாம் பார்த்திராத இன்னும் ஒரு ஆபத்தான முகமும் நிலக்கரிக்கு உண்டு.

பல கோடி ஆண்டுகளாக பூமியின் அடியில் சப்தமின்றி உறங்கிக் கிடந்த நிலக்கரியை சுரங்கங்கள் அமைத்துச் சுரண்டி எடுக்கும் கலாசாரம் கி.பி. 2-ம் நூற்றாண்டிலேயே தொடங்கி விட்டது. தொழில்புரட்சிக்கு பின்னர் நவீன தொழில்நுட்பத்தின் உதவியுடன் உலகம் முழுவதும் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணி தீவிரம் அடைந்தது. ஆசியாவிலேயே பெரிய நிலக்கரிச் சுரங்கம் ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாரியாவில் உள்ளது.

பசியும் பட்டினியும் வறுமையும் நிறைந்த இந்தப் பகுதியானது, நிலக்கரிச் சுரங்கங்கள் அமைப்பதற்கு முன்பு, பழங்குடியினர் வாழ்ந்த அழகிய அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. தற்போது கரும் பாலைவனமாகக் காட்சியளிக்கும் ஜாரியா நிலக்கரி சுரங்கப் பகுதியில் இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட தீ விபத்துகள் நடந்திருக்கின்றன.

அனல்மின் நிலையம் அமைப்பவர்கள், வேலைவாய்ப்பு நிச்சயம் என்ற வாக்குறுதிகளுடன்தான் வருவார்கள். ஆனால், அதனால் வளங்கள் உறிஞ்சப்படுவதுதான் அதிகம் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகிறார்கள்.

உத்தரபிரதேச மாநிலத்தில் சிங்ரவுலி அனல் மின் நிலையத்தைச் சுற்றி வசிக்கும் மக்களின் ரத்தத்தில் பாதரசத்தின் அளவுக்கு அதிகமாக உள்ளதாக அங்கு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

மின்சாரத் தேவையை பூர்த்தி செய்வதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு அமைக்கப்படும் நிலக்கரிச் சுரங்கங்களும், அனல் மின் நிலையங்களும் ஆபத்தானவை என்பதை அறிந்திருந்தும், நாம் அதை அலட்சியப்படுத்திக் கொண்டிருக்கிறோம் என்ற விவாதமும் நடக்காமல் இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com