தினம் ஒரு தகவல் : யானைகளின் எதிர்வினை

ஆன்மிகத் திருத்தலமான திருவண்ணாமலை பகுதியில் உள்ள வனப்பகுதியை விட்டு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஆறு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்தன.
தினம் ஒரு தகவல் : யானைகளின் எதிர்வினை
Published on

ஆபரேஷன் மலை என்ற பெயரில் 200 வனத்துறையினர், நூற்றுக்கும் மேற்பட்ட வேட்டைத் தடுப்புக் காவலர்கள், ஐந்து கும்கி யானைகள், 22 யானைப்பாகன்கள், எட்டு மயக்க ஊசிபோடும் மருத்துவர்கள் புடைசூழ அடக்கி ஒடுக்கி காட்டுப்பகுதிக்குள் அனுப்பிய வீரதீரத்துக்குப் பிறகு, ஆபரேஷன் மலை என்ற வார்த்தைகள் பிரபலமாகிவிட்டன. வந்த வழியை மறக்காதே என்பது பழமொழி, வரும் வழியை மறிக்காதே என்கின்றன யானைகள். ஆந்திராவிலிருந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை போன்ற பகுதிகளுக்கு யானைகள் இடம் பெயர்ந்து செல்வது நெடுங்கால வழக்கம், 1980-ல் சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு என்.எச்.46 சாலை அமைக்கப்பட்டபோது யானைகளின் வழித்தடம் அழிக்கப்பட்டது.

ஆந்திர வனப்பகுதியிலிருந்து தமிழக வனப்பகுதிக்குள் நுழையும் யானைகள் திரும்பவும் ஆந்திர வனப்பகுதிக்கோ அல்லது கர்நாடக வனப்பகுதிக்கோ போக முடியாதவாறு வழித்தடங்கள் மறிக்கப்பட்டு விட்டன. எந்தநேரமும் நெரிசல், வாகன இரைச்சல்கள் யானைகளை அலைக்கழிக்கவே, அவை திருவண்ணாமலை, வேலூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள வனப்பகுதிகளில் புகலிடம் தேடின.

இந்த ஐந்து மாவட்டங்களில் உள்ள கிழக்கு மலைத்தொடர் வனப்பகுதியில் கல் உடைக்கும் குவாரிகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், குறுகிய காப்புக்காடுகளுக்குள் போதுமான உணவும், தண்ணீரும் இல்லாததால், சில ஆண்டுகளுக்கு முன்பு 22 வயதுள்ள பெண் யானையின் வழிநடத்தலின்படி ஐந்து யானைகள் உயிர் வாழ இடம் தேடின. அப்போது இந்த மாவட்டங்களில் உள்ள ஊர்களில் கரும்பு, வாழை, கேழ்வரகு, நெல் போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டிருந்தன.

உணவுக்காக தேடி அலைந்த அந்த யானைகள் ஊருக்குள் புகுந்தன. பின்னர் விளை நிலங்களை சேதப்படுத்தவும் ஆரம்பித்தன. இதனால் வேளாண் மக்கள் மன வேதனைக்கு ஆளானார்கள். அதைத்தொடர்ந்து வனத்துறையினர் யானைகளைக் காட்டுக்குள் விரட்டுவதும், மீண்டும் யானைகள் திரும்பவும் ஊருக்குள் வருவதுமாய் இருந்தன. அதன்பின்பு தொடர்ந்து வனத்தில் நிலவிய கடும் வறட்சி, யானைகளின் வழித்தடங்கள் அழிப்பு போன்ற நெருக்கடிகளால் யானைகளின் எதிர்வினை எவ்வாறு இருந்து வருகிறது என்பதை நாம் இன்று வரை அறிய முடிகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com