தினம் ஒரு தகவல் : சாம்பார் வந்த கதை

மராட்டியர்கள் நமக்குத் தந்த உணவுக் கொடைதான் சாம்பார். மராட்டியர்கள் புளிக்குழம்பு வைப்பதற்குப் பெயர் பெற்றவர்கள்.
தினம் ஒரு தகவல் : சாம்பார் வந்த கதை
Published on

தஞ்சையை ஆண்ட முதல் மராட்டிய மன்னரான வெங்கோஜியின் மகன் சாஹூஜி-1 காலத்தில் தான் சாம்பார் உருவானது. 12 வயதிலேயே ஆட்சிப் பொறுப்பை ஏற்றவர் அவர். மராட்டியர்கள் செய்யும் ஆம்தி, சாஹூஜிக்குப் பிடித்த உணவு வகைகளில் ஒன்றாம்.

ஆனால், சாஹூஜிக்குப் பிடித்தமான குழம்பை வைப்பதற்கு அடிப்படைத் தேவையான கோகம் புளி ஒரு நாள் வரவில்லை. இதை எப்படிச் சமாளிப்பது என்று யோசித்த சாரு விலாச போஜன சாலை, எனப்பட்ட தஞ்சை அரண்மனை சமையலறையின் நிபுணர்கள், நாம் பயன்படுத்தும் புளியம்பழத்தை வைத்து முதன்முறையாக ஒரு குழம்பை வைத்திருக்கிறார்கள். அத்துடன் துவரம்பருப்பு, காய்கறி, மசாலா பொருட்களையும் சேர்த்திருக்கிறார்கள். அதுவே இன்றைய சாம்பாரின் மூலகர்த்தா.

ஆச்சரியம் என்னவென்றால், ராஜா சாஹூஜிக்கு இந்த புதிய குழம்பு பிடித்துப் போய்விட்டது. எவ்வளவு பிடித்தது என்றால் தனது ஒன்றுவிட்ட சகோதரரான, மராட்டிய சிவாஜியின் மகன் சாம்போஜிக்கு விருந்தில் சாம்பாரைப் படைத்துள்ளார். அதன்பிறகு சாம்போஜியை கவுரவிக்கும் வகையில், அதற்கு சாம்போஜி ஆம்தி என்று பொருள்படும் வகையில், சாம்பார் என்ற பெயரை வைத்ததாக கூறப்படுகிறது.

சாம்பார் தொடர்பாக போஜன குதூகலம், சரபேந்திர பாஸ்திரம் என்ற இரண்டு நூல்களில் எழுதப்பட்டுள்ளன. பதினேழாம் நூற்றாண்டில் எழுதப்பட்ட இவை இரண்டும், உணவு செய்முறையை விளக்கும் புத்தகங்கள். மராட்டிய மன்னர்களுக்கு பொதுவாகவே எல்லாவற்றையும் ஆவணப்படுத்தும் பண்பு இருந்திருக்கிறது. அதன் வெளிப்பாடுதான், இந்த நூல்கள். பின்னால் இரண்டாம் சரபோஜி (1812) காலத்தில் புதுப்பிக்கப்பட்ட சரஸ்வதி மகால் நூலகத்தில் இந்த நூல்கள் பாதுகாக்கப்பட்டன.

ஆனால் சரபேந்திர பாஸ்திரத்தில் வேப்பம்பூ சாம்பார் செய்முறை மட்டும்தான் கொடுக்கப்பட்டுள்ளதாம். ஒரு வேளை அதற்குப் பிறகு மற்ற சாம்பார் வகை பிரசித்தி பெற்றிருக்கலாம். ஆனால் சாம்பார் என்ற வார்த்தை தெலுங்கில் இருந்து தமிழுக்கு வந்ததாக தமிழ் பேரகராதி குறிப்பிடுகிறது.

சம்பாரம் என்பது மசாலா பொருட்களை அரைத்துச் சேர்ப்பது என்றும், அதனால் தான் இதற்கு சாம்பார் என்று பெயர் வந்ததாகவும் கூறப்படுவதுண்டு.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com