

நாகர்கோவில்,
குமரி மாவட்டம் மணலிக்கரை பகுதியை சேர்ந்தவர் அஜின் மோன் (வயது 21). இவரும், இவருடைய நண்பர் பெஞ்சமின் (23) என்பவரும் நேற்று மோட்டார் சைக்கிளில் நாகர்கோவில் வந்தனர். பின்னா இரவு 11 மணியளவில் மீண்டும் வீட்டுக்கு புறப்பட்டனர். மோட்டார் சைக்கிளை பெஞ்சமின் ஓட்டியுள்ளார். பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சந்திப்பில் இருந்து வெட்டூர்ணிமடம் நோக்கி சென்றபோது எதிரே ஒரு ஆட்டோ வந்தது.
அப்போது எதிர்பாராத விதமாக ஆட்டோவும், மோட்டார் சைக்கிளும் மோதிக் கொண்டன. இந்த சம்பவத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த 2 பேரும் சாலையில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பினர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது அஜின் மோன் ஏற்கனவே இறந்துவிட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அவருடைய நண்பரான பெஞ்சமினுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து குறித்து போக்குவரத்து புலனாய்வு பிவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். நள்ளிரவில் நடந்த இந்த விபத்து அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.