வனத்துறை விசாரணைக்கு சென்றபோது சாவு: விவசாயி உடலை வாங்க மறுத்து 6-வது நாளாக போராட்டம் நீடிப்பு

வனத்துறை விசாரணைக்கு சென்றபோது உயிரிழந்த விவசாயி உடலை வாங்க மறுத்து நேற்று 6-வது நாளாக போராட்டம் நடந்தது. அப்போது காங்கிரஸ் கட்சியினர் நேரில் சென்று உறவினர்களுக்கு ஆறுதல் கூறினர்.
வனத்துறை விசாரணைக்கு சென்றபோது சாவு: விவசாயி உடலை வாங்க மறுத்து 6-வது நாளாக போராட்டம் நீடிப்பு
Published on

கடையம்,

தென்காசி மாவட்டம் கடையம் அருகே ஆழ்வார்குறிச்சி வாகைகுளத்தை சேர்ந்தவர் அணைக்கரை முத்து (வயது 72), விவசாயி. இவர் தனது வீட்டு அருகே வயலில் மின்வேலி அமைத்தது தொடர்பாக கடையம் வனத்துறையினர் அழைத்து சென்று விசாரணை நடத்தியபோது உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவரை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் ஆழ்வார்குறிச்சி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இதற்கிடையே, அணைகரைமுத்துவின் உடல் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்படடது. ஆனால், வனத்துறையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று கூறி அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாகைகுளத்தில் உள்ள அணைக்கரை முத்துவின் வீட்டின் முன்பு நேற்று 6-வது நாளாக இந்த போராட்டம் நீடித்தது.

காங்கிரஸ் கட்சியினர் ஆறுதல்

இந்த நிலையில் முன்னாள் மத்திய மந்திரி ஆர்.தனுஷ்கோடி ஆதித்தன், நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ரூபி மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ. ரவி அருணன், கிழக்கு மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் அழகுதுரை உள்பட கட்சி நிர்வாகிகள் நேற்று அணைக்கரை முத்துவின் வீட்டுக்கு நேரில் சென்றனர். அங்கிருந்த அவரது உறவினர்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

பின்னர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தனுஷ்கோடி ஆதித்தன் கூறியதாவது:-

நீதி வழங்க வேண்டும்

அணைக்கரை முத்து மரணத்தில் தொடர்புடைய அனைத்து வனத்துறையினர் மீதும் உடனடியாக கொலை வழக்குபதியப்பட்டு மிகப்பெரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். தமிழக அரசு உடனடியாக அந்த பகுதி மக்களுக்கு நீதியையும், நியாயத்தையும் வழங்க வேண்டும் என்பதுதான் இந்திய தேசிய காங்கிரசின் எண்ணமாக இருந்து கொண்டியிருக்கிறது என்பதை தெளிவாக சொல்லி கொள்கிறோம். அணைக்கரை முத்துவின் படுகொலைக்கு காங்கிரஸ் பேரியக்கம் தனது கண்டனத்தை தெரிவிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோரும் சென்று ஆறுதல் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com