குழந்தைகளின் செலவை கட்டுப்படுத்தும் ‘டெபிட் கார்டு’!

பெற்றோர், தங்கள் பிள்ளைகளிடம் இந்த கார்டை கொடுத்து, அவர்களுக்கு அவசியமான அளவு பணத்தை இதற்கு அனுப்பி வைக்கலாம்.
குழந்தைகளின் செலவை கட்டுப்படுத்தும் ‘டெபிட் கார்டு’!
Published on

பெற்றோருக்கு எப்போதுமே பிள்ளைகள் மீது அக்கறை அதிகம். அதனால் தங்கள் தகுதியை மீறியும் பிள்ளைகளின் கனவை நிறைவேற்ற போராடும் பெற்றோர் பெருகிவிட்டார்கள். அவர்கள் பிள்ளைகளுக்கு செலவுக்கு பாக்கெட் மணி வழங்குவதிலும் பஞ்சம் வைப்பதில்லை. பெற்றோரின் அக்கறையை தவறாக புரிந்து கொள்ளும் குழந்தைகள் பலர் வரைமுறையின்றி செலவு செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஆசைப்படுவதையும், ஆடம்பர பொருட்களையும் வாங்கி, காசை வீணாக்குவது அவர்களின் வாடிக்கையாக உள்ளது. இப்படி வரம்பு மீறும் பிள்ளைகளின் செலவுக்கு கிடுக்கிப்பிடி போடக் கூடிய டெபிட் கார்டு ஒன்று அறிமுகமாகி உள்ளது.

நியூயார்க்கைச் சேர்ந்த கரன்ட் என்ற நிறுவனம், குழந்தைகளுக்கான இந்த பிரத்தியேக டெபிட் கார்டை வெளியிட்டு உள்ளது. அப்ளிகேசன் உதவியுடன், இதன் வழியே பணப்பரிமாற்றம் செய்யவும், கட்டுப்படுத்தவும் முடியும். பெற்றோர், தங்கள் பிள்ளைகளிடம் இந்த கார்டை கொடுத்து, அவர்களுக்கு அவசியமான அளவு பணத்தை இதற்கு அனுப்பி வைக்கலாம். அதை அவர்கள் எதற்கெல்லாம் செலவு செய்கிறார்கள் என்பதை அப்ளிகேசன் மூலம் கண்காணிக்கலாம்.

தவறான வழிகளில் செலவு செய்வதை தடுக்கவும் இதில் வழிகள் உண்டு. உதாரணமாக சூதாட்டம், போதைப் பொருட்கள் போன்றவற்றுக்கு பணப்பரிமாற்றம் செய்ய முடியாத அளவுக்கு இதில் தடை செய்ய முடியும். அதுபோன்ற பொருட்கள், சூதாட்ட மையங்களில் இதை பயன்படுத்த முயன்றால் உடனே டெபிட் கார்டு சேவையை நிறுத்திக் கொள்ளும்.

சேமிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கவும் இந்த டெபிட் கார்டில் வழி உள்ளது. உதாரணமாக ஒரு பொருளை வாங்கும்போது ரூ.9.50 என்று பில் வந்தால், கார்டு 10 ரூபாயை கழித்து, மீதி 50 காசை சேமிப்புக் கணக்கில் பத்திரப்படுத்திக் கொள்ளும். இதுபோன்ற சின்னச்சின்னத் தொகை மாதக்கடைசியில் பெரிய அளவில் சேர்ந்திருப்பது பிள்ளைகளுக்கு சந்தோஷத்தைத் தரும். அதே நேரத்தில் பிள்ளைகள் வைத்திருக்கும் டெபிட் கார்டை, அப்ளிகேசன் வழியே பெற்றோரும் பயன்படுத்த முடியும்.

இந்த கார்டு மற்றும் அப்ளிகேசனை உபயோகப்படுத்த வருடத்திற்கு 36 டாலர்கள் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. பிள்ளைகளின் வரவு செலவை கண்காணிக்கும் இந்த கார்டு பெற்றோரிடம் வரவேற்பு பெறுவதைப்போல குழந்தைகளை ஈர்க்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்!

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com