கடன் தொல்லையால் விபரீதம் தாய், தந்தையை கொன்று டிராவல்ஸ் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை

கோவையில் கடன் தொல்லை காரணமாக தாய், தந்தையை கொன்றுவிட்டு டிராவல்ஸ் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடன் தொல்லையால் விபரீதம் தாய், தந்தையை கொன்று டிராவல்ஸ் அதிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Published on

கோவை,

கோவை பீளமேடு போலீஸ் நிலையத்துக்கு திருப்பூரில் இருந்து நேற்று மதியம் பேசியவர் ஆவாரம்பாளையம் பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் பாலமுருகன், மனைவி லட்சுமி, அவரது மகன் வைரமுத்து ஆகியோர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக கடிதம் எழுதி எனக்கு அனுப்பியுள்ளனர். உடனே அங்கு சென்று பாருங்கள் என்று கூறினார்.

இதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது 2 பேர் கீழே ரத்த வெள்ளத்தில் பிணமாகவும், மற்றொருவர் தூக்கில் தொங்கியபடியும் கிடந்தனர். அவர்கள் 3 பேரும் இறந்து 2 நாட்கள் ஆகி இருக்கலாம் என்பது தெரியவந்தது.

விசாரணையில், பிணமாக கிடந்தவர்கள் தனியார் பள்ளி பஸ் டிரைவர் பாலமுருகன் (வயது 55), அவரது மனைவி லட்சுமி (47) மற்றும் இவர்களின் மகன் வைரமுத்து (28) என்பது தெரியவந்தது. வைரமுத்துவுக்கு திருமணமாகவில்லை. இவர் டிராவல்ஸ் வைத்து நடத்தி வந்தார்.

தொழிலில் அவருக்கு நஷ்டம் ஏற்பட்டதால் பலரிடம் கடன் வாங்கியுள்ளார். கடன்தொல்லை காரணமாக வைரமுத்து தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். தான் இறந்த பிறகு பெற்றோர் கஷ்டப்படுவார்கள் என்பதால் அவர்களையும் கொலை செய்து விட்டு தான் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து தந்தை, தாயாரின் மணிக்கட்டை கத்தியால் அறுத்துள்ளார். அதன்பின்னர் அவர்களின் கழுத்தை வைரமுத்து கத்தியால் அறுத்து கொலை செய்துள்ளார்.

பின்னர் வைரமுத்து தனது மணிக்கட்டை கத்தியால் அறுத்து கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து அவர் அறையில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

வைரமுத்து இந்த முடிவுக்கு வருவதற்கு முன்பு தனது சொத்தின் ஆவணங்கள் மற்றும் தான் எழுதிய கடிதம் மற்றும் வீடியோ பதிவை திருப்பூரில் உள்ள தனது உறவினருக்கு கூரியர் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கூரியர் உறவினருக்கு கிடைத்ததும் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்வதற்கு முன்பு வைரமுத்து தனது முகநூல் கணக்கை மூடியதும் விசாரணையில் தெரியவந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com