கடனில் சிக்கித் தவிக்கும் காய்கறி வியாபாரிகள் - சுழற்சிமுறையில் கடை நடத்த அனுமதிக்க கோரிக்கை

ஊரடங்கு உத்தரவு காரணமாக திருப்பத்தூர் தினசரி காய்கறி மார்க்கெட் மூடப்பட்டதால் காய்கறி வியாபாரிகள் கடனில் சிக்கி தவிப்பதாகவும், சுழற்சிமுறையில் கடைகள் நடத்த அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கடனில் சிக்கித் தவிக்கும் காய்கறி வியாபாரிகள் - சுழற்சிமுறையில் கடை நடத்த அனுமதிக்க கோரிக்கை
Published on

திருப்பத்தூர்,

திருப்பத்தூரில் சக்தி நகரில் காய்கறி மார்க்கெட் இயங்கிவந்தது. இங்கு கடைவைத்திருந்த வியாபாரிகள் சென்னை, வேலூர், திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து காய்கறிகளை வாங்கி விற்பனை செய்து கொண்டிருந்தனர். கொரோனா வைரஸ் காரணமாக இந்த மார்க்கெட்டை மாவட்ட நிர்வாகம் பழைய பஸ் நிலையத்திற்கு மாற்றியது. அதைத்தொடர்ந்து பஸ்நிலையத்தில் 90 கடைகள் செயல்பட்டு வந்தது. இந்த நிலையில் திடீரென அந்த காய்கறி கடைகளை மூட உத்தரவிட்டு, வீட்டுக்கே சென்று வாகனங்கள் மூலம் காய்கறிகளை விற்பனை செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது.

பின்னர் கடந்த மாதம் 17-ந் தேதி திருப்பத்தூர் வாணியம்பாடி சாலையிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் 15 காய்கறி கடைகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டது.

இதுகுறித்து எம்.ஜி.ஆர். நகராட்சி காய்கறிகடை வியாபாரிகள் சங்க தலைவர் குலாம்ஜான் கூறியதாவது:-

கடந்த ஒரு மாதமாக 75 காய்கறி வியாபாரிகள் காய்கறிகள் விற்பனை செய்ய முடியாமல் தவித்து வருகிறோம். காய்கறிகளை விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தை வைத்தே குடும்பத்தை நடத்தி வந்தோம். கடந்த ஒரு மாதமாக அத்தியாவசிய பொருளான காய்கறிகளை கூட எங்களால் விற்பனை செய்ய முடியவில்லை.

பலமுறை மாவட்ட நிர்வாகத்தை அணுகியபோதும் திருப்பத்தூர் தாசில்தாரை தொடர்புகொள்ள கூறினார்கள். ஆனால் இதுவரை எங்களுக்கு எந்தவித அனுமதியும் கிடைக்கவில்லை. இதனால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு கடனில் சிக்கி தவிக்கிறோம். 15 பேர் மட்டுமே காய்கறி கடைநடத்த அனுதியளிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றி அனைத்து வியாபாரிகளுக்கும் வாய்ப்பு கிடைக்கும் வகையில் சுழற்சிமுறையில் காய்கறி விற்பனை செய்ய அனுமதிக்கவேண்டும்.

அல்லது தினசரி காய்கறி மார்க்கெட்டில் உள்ள 151 கடைகளில் சமூக இடைவெளி விட்டு வியாபாரம் செய்ய 30 கடைகளுக்காவது அனுமதி அளிக்க வேண்டும். இதனால் எங்களது வாழ்வாதாரம் மேம்படும். மேலும் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு நிவாரண உதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com