நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு கனிமொழி எம்.பி. பேட்டி

நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமர் வேட்பாளர் குறித்து மற்ற கட்சிகளுடன் கேட்டு முடிவு செய்யப்படும் என்று கனிமொழி எம்.பி. கூறினார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு கனிமொழி எம்.பி. பேட்டி
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி கலைஞர் அரங்கில் நேற்று காலை நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கஸ்தூரி தங்கம், மாவட்ட துணை செயலாளர் ராஜ்மோகன் செல்வின் உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக கனிமொழி எம்.பி. கலந்து கொண்டார். கீழமுடிமண்ணை சேர்ந்த பள்ளி மாணவி ஸ்ரீமதி மாவட்ட, மாநில அளவிலான சைக்கிள் போட்டியில் கலந்து கொண்டு பல சாதனைகளை படைத்து உள்ளார். அவர் சர்வதேச போட்டியில் கலந்து கொள்ள சைக்கிள் தேவைப்படுவதாக கிராம சபை கூட்டத்தில் கோரிக்கை வைத்தார். அதன்படி கனிமொழி எம்.பி., மாணவி ஸ்ரீமதிக்கு சுமார் ரூ.5 லட்சம் மதிப்புள்ள சைக்கிளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். அதேபோல் கடந்த ஆண்டு நாக்பூரில் நடந்த தேசிய அளவிலான ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடியை சேர்ந்த 6 வீரர்கள் கனிமொழி எம்.பி.யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

பின்னர் கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை நேரில் சந்தித்து அவர் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். கூட்டணிக்காக அவரை சந்திக்கவில்லை. அடிப்படை மனிதாபிமானத்தின் படி சந்தித்து உள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின்னர் பிரதமர் வேட்பாளர் குறித்து மற்ற கட்சிகளுடன் கேட்டு முடிவு எடுக்கப்படும். ஆனால் தி.மு.க. சொல்லும் பெயர் ராகுல்காந்தி தான்.

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா ஆகியோர் சுயமரியாதையுடன் வளர்த்து வந்த கட்சியை தற்போது உள்ளவர்கள் மற்றவர்களுக்கு அடிபணிந்து செல்லும் நிலைக்கு மாற்றியுள்ளனர். தி.மு.க. கூட்டணி தெளிவாக உள்ளது. தேர்தல் கூட்டணியில் எந்த இழுபறியும் இல்லை. ஆனால் அ.தி.மு.க. எப்படி குட்டிக்கரணம் போட்டு கூட்டணியை உருவாக்குகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com