ஈரோடு பஸ் நிலையத்தில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய முடிவு: வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஆணையாளர் ஆய்வு

ஈரோடு பஸ் நிலையத்தில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளதால், வ.உ.சி. பூங்கா மைதானத்தில் மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் ஆய்வு செய்தார்.
ஈரோடு பஸ் நிலையத்தில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய முடிவு: வ.உ.சி. பூங்கா மைதானத்தில் ஆணையாளர் ஆய்வு
Published on

ஈரோடு,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

ஈரோட்டில் மக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு நேதாஜி தினசரி காய்கறி மார்க்கெட் ஈரோடு பஸ் நிலையத்துக்கு கடந்த மார்ச் மாதம் 28-ந் தேதி தற்காலிகமாக மாற்றப்பட்டது.

அங்கு நள்ளிரவில் மொத்த வியாபாரம் நடத்தப்படுகிறது. காலை 9 மணிக்கு வரை சில்லரை விற்பனையும் நடத்தப்படுகிறது. இதேபோல் சத்திரோடு பகுதியில் உள்ள பஸ் நிலைய வளாகத்தில் பழ சந்தையும் செயல்படுகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு அறிவித்த ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதியுடன் நிறைவடைய உள்ளது. கொரோனாவின் தாக்கம் ஒருபுறம் இருந்தாலும், மக்கள் வருமானமின்றி தவித்து வருகிறார்கள். இதனால் 18-ந் தேதியில் இருந்து பஸ்கள் போக்குவரத்து தொடங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்காரணமாக ஈரோடு பஸ் நிலையத்தில் செயல்பட்டு வரும் காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் ஆலோசனை நடத்தினார்கள்.

இதையடுத்து வ.உ.சி. பூங்கா மைதானத்தில் காய்கறி மார்க்கெட் அமைப்பதற்கான வசதிகள் உள்ளதா? என்று மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு நடத்தினார்கள்.

அப்போது எந்த பகுதிகளில் காய்கறி, பழக்கடைகள் அமைப்பது, வாகனங்கள் எந்த வழியாக உள்ளே வரவேண்டும், போக்குவரத்து நெரிசலின்றி வாகனங்கள் வெளியே செல்வது, பொதுமக்களின் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் கடைகள் எவ்வாறு அமைப்பது ஆகியன குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டால் 18-ந் தேதிக்கு பிறகு 50 சதவீத பஸ்கள் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பஸ் நிலையத்தில் செயல்படும் காய்கறி மார்க்கெட்டை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது. இதுதொடர்பாக வியாபாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது.

பஸ் நிலையத்தில் ஒரு பகுதியில் பஸ்களையும், மற்றொரு பகுதியில் மார்க்கெட்டையும் செயல்படுத்த முடியாத நிலை உள்ளது. எனவே வ.உ.சி. பூங்கா மைதானத்தில் மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய திட்டமிடப்பட்டது. அங்கு 4 ஏக்கர் நிலம் உள்ளது. இதனால் காய்கறி சந்தையும், பழ சந்தையும் அமைக்க போதிய இடவசதி உள்ளது.

எனவே பஸ்கள் இயக்கப்படும் தகவலை பொறுத்து காய்கறி மார்க்கெட்டை இடமாற்றம் செய்வது தொடர்பாக அறிவிக்கப்படும். அதற்கான முன்எச்சரிக்கை நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டு வருகிறது என்று அதிகாரிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com