பாதுகாப்பை பலப்படுத்த முடிவு: மைசூரு அரண்மனையில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்

மைசூரு அரண்மனையில் பாதுகாப்பை பலப்படுத்த கூடுதலாக ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பாதுகாப்பை பலப்படுத்த முடிவு: மைசூரு அரண்மனையில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
Published on

மைசூரு,

உலகப்புகழ் பெற்ற மைசூரு அரண்மனை கர்நாடகத்தின் அடையாள சின்னமாக விளங்குகிறது. 72 ஏக்கர் பரப்பளவில் மிகவும் பிரமாண்டமாக அமைந்திருக்கும் மைசூரு அரண்மனையை சுற்றிப்பார்க்க தினமும், கர்நாடகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மட்டுமல்லாமல், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். மிகவும் பரபரப்பாக காணப்படும் மைசூரு அரண்மனையை பாதுகாப்பது எளிதான காரியம் அல்ல. இதை கருத்தில் கொண்டு மைசூரு அரண்மனை ஆணையம், அரண்மனைக்குள்ளும், அரண்மனை வளாகத்திலும் பொருத்தப்பட்டுள்ள ரகசிய கண்காணிப்பு கேமராக்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்தி உள்ளது.

அதாவது தற்போது மைசூரு அரண்மனை மற்றும் அதன் வளாகத்தில், கூடுதலாக சில இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன்மூலம் அரண்மனையில் மொத்தம் 117 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. அரண்மனையில் நடக்கும் சின்னஞ்சிறிய நிகழ்வுகள் உள்பட அனைத்து நிகழ்வுகளையும் கண்காணிக்கவும், பாதுகாப்பை பலப்படுத்தவும் அரண்மனை அதிகாரிகள் இந்த முடிவை எடுத்துள்ளனர்.

அதாவது சுற்றுலா பயணிகளின் நடவடிக்கைகள் மட்டுமல்லாது அரண்மனையில் உள்ள ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருக்கும் போலீசார் என அனைவரின் நடவடிக்கைகளும் கண்காணிக்கப்பட உள்ளது. இந்த கேமராக்கள் அனைத்தும் சுழலும் தன்மை கொண்டவை. அரண்மனையின் மீதுள்ள கோபுரத்தின் மேல் பகுதி உள்பட அனைத்து இடங்களிலும் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. 24 மணி நேரமும் அவைகள் கண்காணிக்கப்பட உள்ளன.

இதுபற்றி மைசூரு அரண்மனை ஆணைய துணை இயக்குனர் சுப்பிரமண்யா நிருபர்களிடம் கூறியதாவது:-

மைசூரு அரண்மனையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அமைப்பு மிகச்சிறந்த அமைப்பாகும். அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் மைசூரு விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ளது போன்று இருப்பதாக மைசூரு மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணா பாராட்டி உள்ளார். ஒரு உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில், இன்ஸ்பெக்டர்கள், உதவி சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீஸ்காரர்கள் என மொத்தம் 75 பேர் மைசூரு அரண் மனையில் தினமும் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

கர்நாடகத்தின் சின்னமாக விளங்கும் மைசூரு அரண்மனையை குறிவைத்து பயங்கரவாதிகள் எப்போது வேண்டுமானாலும் தாக்குதல் நடத்தலாம் என்பதால், அங்கு காலை மற்றும் மாலை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மோப்பநாய் உதவியுடன் தினமும் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள்.

தற்போது தசரா விழாவையொட்டி மைசூரு இளவரசர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, தர்பார் ஹாலில் தங்க சிம்மாசனம் ஜோடிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக அது திரையால் மூடப்பட்டுள்ளது. இந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் அடுத்த 6 மாதங்கள் வரை அப்படியே இருக்கும். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரைவிட மைசூரு அரண்மனையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் திறமையாக வேலை பார்த்து வருகிறார்கள்.

ஒருவேளை மைசூரு அரண்மனைக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால் அப்போது மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மைசூரு அரண்மனையில் பாதுகாப்பு பணியில் அமர்த்தப்படுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com