தீபாவளி பண்டிகையையொட்டி கோவில்களில் கேதார கவுரியம்மன் விரத சிறப்பு வழிபாடு - திரளான பெண்கள் கலந்து கொண்டனர்

தீபாவளி பண்டிகையையொட்டி தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து கோவில்களிலும் நடைபெற்ற கேதார கவுரியம்மன் விரத சிறப்பு வழிபாட்டில் பெண்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தீபாவளி பண்டிகையையொட்டி கோவில்களில் கேதார கவுரியம்மன் விரத சிறப்பு வழிபாடு - திரளான பெண்கள் கலந்து கொண்டனர்
Published on

தர்மபுரி,

தீபாவளி பண்டிகையையொட்டி வரும் அமாவாசை தினத்தில் குடும்ப நன்மைக்காகவும், மாங்கல்ய பாக்கியம் நிலைக்க வேண்டியும் பெண்கள் கேதார கவுரியம்மன் விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். அதன்படி ஐப்பசி மாத அமாவாசை தினமான நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் கேதார கவுரியம்மன் விரதத்தையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை சிவசுப்பிரமணிய சாமி கோவில் வளாகத்தில் கேதார கவுரியம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகாதீபாராதனையும், அலங்கார சேவையும் நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் பெண்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். அப்போது பெண்கள் ஒரு தட்டில் 21 எண்ணிக்கையில் வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், அதிரசம், மஞ்சள் கொம்பு ஆகியவற்றை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தினர். இதில் கலந்து கொண்ட பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் உள்ளிட்ட மங்கள பொருட்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன.

இதேபோன்று தர்மபுரி நகரில் உள்ள கோட்டை கல்யாண காமாட்சியம்மன் கோவில், நெசவாளர் நகர் பாலமுருகன் கோவில், அன்னசாகரம் சிவசுப்பிரமணிய சாமி கோவில், கடைவீதி வெங்கட்ரமண சாமி கோவில், எஸ்.வி. ரோடு சுப்பிரமணிய சாமி கோவில், பாரதிபுரம் முருகன் கோவில் உள்பட அனைத்து கோவில்களிலும் கேதார கவுரியம்மன் விரதத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் பெண்கள் கலந்துகொண்டு சுமங்கலி பூஜை நடத்தினர். மாவட்டத்தில் அரூர், பாலக்கோடு, பென்னாகரம், இண்டூர், பாப்பாரப்பட்டி, காரிமங்கலம், மொரப்பூர், கம்பைநல்லூர், கடத்தூர், பொம்மிடி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கோவில்களிலும் கேதார கவுரியம்மன் விரதத்தையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com