அமைச்சர் குறித்து அவதூறு பேச்சு: விராலிமலையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

அமைச்சர் குறித்த அவதூறு பேச்சை கண்டித்து விராலிமலையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் அ.தி.மு.க.வினர் பெட்ரோல் பங்கை சேதப் படுத்தியதாக போலீசில் தி.மு.க.வினர் புகார் மனு கொடுத்தனர்.
அமைச்சர் குறித்து அவதூறு பேச்சு: விராலிமலையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
Published on

விராலிமலை,

புதுக்கோட்டையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழக அரசை கண்டித்து தி.மு.க.வினரின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அரிமளம் ஒன்றிய செயலாளர் பொன்.ராமலிங்கம், புதுக்கோட்டை மாவட்ட இலக்கிய அணி துணை செயலாளர் திருநல்லூர் பழனியப்பன் ஆகியோர் அமைச்சர் விஜயபாஸ்கரை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது குறித்து அ.தி.மு.க. சார்பில் டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின்பேரில் அரிமளம் ஒன்றிய செயலாளர் பொன்.ராமலிங்கம் மற்றும் திருநல்லூர் பழனியப்பன் ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் அமைச்சர் விஜயபாஸ்கரை அவதூறாக பேசிய, திருநல்லூர் பழனியப்பனை கைது செய்யக்கோரி விராலிமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க வினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதையொட்டி விராலிமலை காமராஜர் நகரிலிருந்து அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக கடைவீதி வழியாக செக்போஸ்ட்டிற்கு சென்றனர். அப்போது புதிய பேருந்து நிலையத்திற்கு முன்பு உள்ள திருநல்லூர் பழனியப்பனுக்கு சொந்தமான பெட்ரோல் பங்க் முன்பு அ.தி.மு.க.வினர் பழனியப்பனுக்கு எதிராக கோஷமிட்டனர். அப்போது இதனை எதிர்த்து பங்க் ஊழியர்களும் கோஷமிட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்மாறன் மற்றும் போலீசார் இருதரப்பினரிடமும் பேசி தனித்தனியாக அனுப்பி வைத்தனர். அதன்பிறகு அ.தி.மு.கவினர் செக்போஸ்ட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய பிறகு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் இளங்குமரன், சத்தியசீலன் தலைமையில் தி.மு.க.வினர் திருநல்லூர் பழனியப்பன் பெட்ரோல் பங்க் முன்பு திரண்டனர். அப்போது அங்கு வந்த இலுப்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கோபாலச்சந்திரன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெட்ரோல் பங்க் கண்ணாடி, செடிகளை சேதபடுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென போலீஸ் நிலையத்தில் புகார் அளிப்பதாக தெரிவித்த, தி.மு.க.வினர் மற்றும் பெட்ரோல் பங்க் மேலாளர் ராஜ்கபூர் ஆகியோர் ஊர் வலமாக விராலிமலை போலீஸ் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தனர

அந்த புகார் மனுவில், அமைச்சர் விஜயபாஸ்கர் தூண்டுதலின்பேரில், ஒன்றிய செயலாளர் சுப்பையா, அட்மாசேர்மன் பழனியாண்டி, இலுப்பூரைச் சேர்ந்த குருபாபு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், இலுப்பூர் நகரச் செயலாளர் சத்யா, ராஜேந்திரன், கல்குடி அவைத்தலைவர் பெரியசாமி, இவரது மகன் சரவணன், கீரனூர் விஜயபாஸ்கர், இலுப்பூர் கோட்டைத் தெருவைச்சேர்ந்த கணேசன், நீர்பழனி சுரேஷ், அன்னவாசல் லோகநாதன், சாம்பசிவம், விராலிமலை அய்யப்பன், ராஜேஸ்கண்ணா உள்பட அ.தி.மு.க.வை சேர்ந்த பலர் ஒன்று சேர்ந்து பெட்ரோல் பங்க் மீது கற்களை வீசி கண்ணாடியை உடைத்தனர். பங்கில் உள்ள செடிகளையும் சேதப்படுத்தி, தகாத வார்த்தையால் எங்களை பேசினர். மேலும் பங்க்கில் வேலைபார்த்து கொண்டிருந்த ஆண், பெண் ஊழியர்களை தாக்கி பெட்ரோல் பங்கிற்கு சேதத்தை ஏற்படுத்திய, அ.தி.மு.க. நிர்வாகிகள் மீதும், இருசக்கர வாகனங்களில் வந்த 14 பேர் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி அந்த மனுவில் கூறியிருந்தனர். இந்த புகார் மனுவை பெற்றதற்கான ரசீதை போலீசார் பங்க் மேலாளரிடம் கொடுத்தனர். இதனையடுத்து தி.மு.க.வினர் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் விராலிலையில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளதால், போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com