பதற்றமான வாக்குச்சாவடிகளில் ‘வெப் கேமரா’ பொருத்தும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு

பதற்றமான வாக்குச்சாவடிகளில் ‘வெப் கேமரா’ பொருத்தும் பணி தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பதற்றமான வாக்குச்சாவடிகளில் ‘வெப் கேமரா’ பொருத்தும் பணி தனியாரிடம் ஒப்படைப்பு
Published on

திருச்சி,

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சியினர் சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர். திருச்சி மாவட்டத்தில் வாக்குப்பதிவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகளில் வாக்குச்சாவடி மையங்களில் பயன்படுத்தக் கூடிய பொருட்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலகம் வந்தது. அவற்றை அந்தந்த தொகுதி தேர்தல் அலுவலர் அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடந்து வருகிறது. எழுது பொருட்கள், வாக்காளர்கள் கையில் வைக்கும் மை, படிவ உறைகள் உள்ளிட்டவை தனித்தனியாக பிரித்து அனுப்பும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

திருச்சி மாவட்டத்தில் ஆயிரத்து 92 இடங்களில் 2 ஆயிரத்து 533 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. இதில் 153 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளது. இந்த வாக்குச்சாவடிகளில் கூடுதல் கவனம் செலுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப்-கேமரா பொருத்த நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:-

கடந்த தேர்தலில் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப்-கேமரா பொருத்தும் பணிக்காக பள்ளிக்கல்வி துறையில் இருந்து மடிக்கணினிகள் பெறப்பட்டு அதில் கேமரா பொருத்தி கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்கப்பட்டது. அதேபோல இந்த முறையும் வெப்-கேமரா பொருத்தப்பட உள்ளது. இதற்கான பணிகளை தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்த அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் வெப்-கேமரா பொருத்தும் பணியை அவர்கள் மேற்கொள்கின்றனர். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் வெப்-கேமரா பொருத்தும் பணியை ஒப்பந்த நிறுவனத்தினர் மேற்கொள்ள வந்துள்ளனர். மடிக்கணினிகள், கேமரா உள்ளிட்ட உபகரணங்கள் அனைத்தையும் அவர்களே கொண்டு வந்து பொருத்தும் பணியை மேற்கொள்ள உள்ளனர்.

பதற்றமான வாக்குச்சாவடிகளில் மத்திய அரசு பணி செய்யும் ஒரு நபர் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் நுண் பார்வையாளராக நியமிக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளது. மேலும், கூடுதலாக துணை ராணுவ படை வீரர் ஒருவரும் இந்த வாக்குச்சாவடிகளில் பணியில் அமர்த்தப்படுவார்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com