டெல்டா மாவட்டங்கள் வேளாண் மண்டலமாக அறிவிப்பு: அ.தி.மு.க. அரசு, உழவர்களின் அரசு ஓ.பன்னீர்செல்வம் பேச்சு

டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ள அ.தி.மு.க. அரசு, உழவர்களின் அரசு என தஞ்சையில் நடந்த திருமண விழாவில் ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
டெல்டா மாவட்டங்கள் வேளாண் மண்டலமாக அறிவிப்பு: அ.தி.மு.க. அரசு, உழவர்களின் அரசு ஓ.பன்னீர்செல்வம் பேச்சு
Published on

தஞ்சாவூர்,

தஞ்சையில் நடந்த அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் இல்ல திருமண விழாவிற்கு ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி பேசினார். அவர் பேசியதாவது:-

திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படும் என்று சொல்வார்கள். அப்படி சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்ட வைத்திலிங்கம் இல்ல திருமணத்தை சொர்க்கத்தில் இருந்தபடியே ஜெயலலிதா வாழ்த்திக் கொண்டு இருக்கிறார். தஞ்சை தரணி மீது ஜெயலலிதா எவ்வளவு பண்பும், பற்றும் கொண்டிருந்தார் என்பது டெல்டா விவசாயிகளுக்கு நன்கு தெரியும்.

காவிரி நீரை பங்கீடு செய்வதற்காக ஏற்படுத்தப்பட்ட காவிரி நடுவர் மன்றம் 17 ஆண்டுகளுக்கு பிறகு இறுதி தீர்ப்பு வழங்கியது. அந்த இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டபோது மத்தியில் காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி ஆட்சியும், மாநிலத்தில் தி.மு.க. ஆட்சியும் நடந்தது.

எந்த பலனும் இல்லை

மத்தியிலும், மாநிலத்திலும் நீங்களே ஆட்சியில் இருக்கிறீர்கள். நீங்கள் நினைத்தால் 24 மணி நேரத்தில் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்றுத்தர முடியும். அரசாணை பெற்றால் தான் இந்த தீர்ப்பு முழுமை பெறும். எனவே உடனடியாக அந்த பணியை ஆற்ற வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்கு ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்தார். எந்தவித பலனும் இல்லை. எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை.

2011-ம் ஆண்டு முதல்-அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பு ஏற்று ஆட்சிக்கு வந்தவுடன் காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு அரசாணை வெளியிடும்படி அன்றைக்கு பிரதமராக இருந்த மன்மோகன்சிங்கிற்கு பல முறை கடிதம் அனுப்பி வேண்டுகோள் விடுத்தார். பலன் இல்லை. இந்த பிரச்சினையை உச்சநீதிமன்றத்துக்கு கொண்டு சென்று சட்ட போராட்டம் நடத்தி 7 ஆண்டுகளுக்கு பிறகு காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்று தந்த ஒரே முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான்.

பாராட்டு விழா

இதற்காக அவருக்கு டெல்டா விவசாயிகள் பாராட்டு விழா நடத்தினார்கள். எனது 33 ஆண்டு கால அரசியல் வாழ்வில், மகிழ்ச்சியாக இருந்த நாள் இருக்கும் என்று சொன்னால் அது காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்புக்கு அரசாணை பெற்று தந்த நன்னாள்தான் என்று ஜெயலலிதா சொன்னார்.

இன்றைக்கு நடக்கும் அரசு ஜெயலலிதா காட்டிய வழியில் நின்று செயலாற்றிக்கொண்டு இருக்கிறது. தஞ்சை தரணிக்கு பெரும் அச்சுறுத்தல், அபாயம் ஏற்படப்போகிறது என மக்கள் பெரிதும் கவலை கொண்டிருந்தனர். இந்த பூமி பெரும் புண்ணியபூமி. தமிழகத்திற்கே உணவு அளிக்கக்கூடிய புண்ணியபூமி. இங்குள்ள உழவர்கள் சேற்றில் கால் வைத்தால் தான் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் சோற்றில் கையை வைக்க முடியும். இந்த பிரச்சினைக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. மக்கள் கவலையோடு இருந்தார்கள். ஏனென்றால் ஹைட்ரோ கார்பன் திட்டம் வந்துவிட்டதாமே, சோதனை நடக்கிறதாமே என்ற பயமுறுத்தல், அச்சுறுத்தல் வந்தது.

உழவர்களின் அரசு

இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக முதல்-அமைச்சர் அறிவித்து வரலாற்றில் பதிவு செய்து இருக்கிறார்.

அன்றைக்கும் சரி, இன்றைக்கும் சரி, என்றைக்கும் சரி... அ.தி.மு.க. அரசு, உழவர்களின் அரசு. அதை கொள்கை முடிவாக, உயிர் மூச்சாக என்றைக்கும் நாங்கள் மக்களுடன் தான் இருப்போம். மக்களுக்காக தான் ஆட்சி செய்வோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

ஜி.கே.வாசன்

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேசியதாவது:-

டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டசபையில் மசோதா நிறைவேற்றிய இந்த அரசுக்கு விவசாயிகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விவசாயிகளின் வாழ்வில் ஒளி ஏற்றக்கூடிய நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளது. விவசாயிகளின் எண்ணத்தை 100 சதவீதம் தொடர்ந்து இந்த ஆட்சி நிறைவேற்றும் என்கிற முழு நம்பிக்கை மக்களிடம் உள்ளது. எனவே. இந்த அரசுக்கு பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு தரவேண்டும்.

தமிழகத்தில் தியாகிகள், கர்மவீரர் காமராஜர், பேச்சாளர்கள் முதல்-அமைச்சராக பொறுப்பு வகித்துள்ளனர். தமிழக வரலாற்றில் 70 ஆண்டு காலத்தில் ஒரு விவசாயி முதல்-அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார். தஞ்சை மாவட்டம் பல துறைகளில் வளர்ச்சி பெற்று இருக்கிறது என்றால் அதற்கு அடித்தளம் வைத்திலிங்கத்தின் செயல்பாடு தான். இன்றைக்கு ஜெயலலிதா இல்லையென்றாலும் அவர் நிறைவேற்ற எண்ணிய திட்டங்கள் தங்கு தடையின்றி மக்களை சென்று சேரும் வகையிலும், ஜெயலலிதாவுக்கு புகழ் சேர்க்கும் வகையிலும் முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் செயல்படுகின்றனர்.

பொய் பிரசாரங்கள்

பிற மாநிலங்களை ஒப்பிடும்போது பல்வேறு துறைகளுக்காக மத்திய அரசின் சான்றிதழை தமிழகம் பெறுகிறது என்றால் அது தான் தமிழகத்தின் வளர்ச்சிக்கு அடித்தளம். எதிர்க்கட்சிகளின் தவறான யூகம், பொய் பிரசாரங்களை முறியடித்து, அதற்கு முற்றுப்புள்ளி வைத்து அ.தி.மு.க. அரசு தொடர்ந்து வெற்றி நடைபோடுகிறது. வருங்கால வெற்றி பாதையை வகுத்துக்கொண்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com