கூடலூர் அருகே வீடு, வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானை இழப்பீடு வழங்க கோரிக்கை

கூடலூர் அருகே வீடு, வாழைகளை காட்டுயானை சேதப்படுத்தியது. இதற்கு இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூடலூர் அருகே வீடு, வாழைகளை சேதப்படுத்திய காட்டு யானை இழப்பீடு வழங்க கோரிக்கை
Published on

கூடலூர்,

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகளவு காணப்படுகிறது. தொரப்பள்ளி, அள்ளூர் வயல் பகுதியில் காட்டுயானைகள் சாலையில் உலா வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு அள்ளூர் வயலில் வீடு மற்றும் நெல் நாற்றுகளை காட்டு யானை ஒன்று மிதித்து சேதப்படுத்தியது. இதனால் அப்பகுதி மக்கள், விவசாயிகள் அச்சம் அடைந்தனர்.

இந்த நிலையில் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட செளுக்காடி பகுதியில் நேற்று நள்ளிரவில் காட்டு யானை ஒன்று புகுந்தது. பின்னர் அப்பகுதி மக்களின் வீடுகளை முற்றுகையிட்டது. தொடர்ந்து மானு என்பவரது வீட்டின் சமையல் அறையை உடைத்து சேதப்படுத்தியது.

வாழைகளை தின்றது

அப்போது வீட்டில் இருந்த குடும்பத்தினர் மற்றும் குழந்தைகள் பீதியில் மற்றொரு அறையில் பதுங்கி இருந்தனர். பின்னர் சிறிது நேரத்தில் அங்கிருந்து காட்டு யானை சென்றது. தொடர்ந்து அதே பகுதியைச் சேர்ந்த ராமையா என்பவரது தோட்டத்தில் காட்டு யானை புகுந்தது. பின்னர் அங்கு பயிரிட்டு இருந்த வாழைகளை தின்று சேதப்படுத்தியது.

இது குறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-

இதனால் செளுக்காடி, வேடன் வயல் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாய நிலங்களுக்குள் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கடந்த 2 தினங்களுக்கு முன்பு 20 வயதான ஆண் காட்டு யானை விவசாய பயிரை தின்பதற்காக வந்தது. அப்போது தொடர் மழையின் காரணமாக விவசாய நிலம் சேறும் சகதியுமாக காணப்பட்டது.

நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இதை அறியாத காட்டுயானை சேற்றில் சிக்கி உயிரிழந்தது. இருப்பினும் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் விவசாயப் பயிர்களையும், உடமைகளை பாதுகாக்க வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உரிய இழப்பீடு வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com