நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்க வேண்டும் - தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை

உயர்மின் கோபுரம் அமைக்க கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
நிலங்களுக்கு இழப்பீட்டு தொகை உயர்த்தி வழங்க வேண்டும் - தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை
Published on

கிருஷ்ணகிரி,

தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ராமகவுண்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சத்தீஸ்கார் மாநிலத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் வரை உயர் அழுத்த அகல மின்பாதை கோபுரம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. இதற்காக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 40-க்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் நிலத்தில் உயர்மின் கோபுரம் அமைக்க திட்டமிட்டுள்ளனர். இதில் விவசாயிகளின் வீடு, ஆழ்துளை கிணறு, மா, தென்னை மரங்கள், பயிர்கள் அழிக்கப்படுகின்றன. இதற்கு அரசு வழங்கும் இழப்பீட்டு தொகை மிகவும் குறைவு என்றும், உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.

இதற்காக பல கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் விளைவாக கிருஷ்ணகிரி உதவி கலெக்டர் பாதிக்கப்பட்ட சந்தூர், வெப்பாளம்பட்டி, தொப்படிகுப்பம், அத்திகானூர், கண்ணண்டஅள்ளி பகுதி விவசாயிகளின் பிரதிநிதிகளை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.

இந்த பேச்சு வார்த்தையில் விவசாய நிலங்களில் மின் கம்பிகள் வருவதால் பயிர்களில் மகரந்த சேர்க்கை நடைபெறும் தேனி பூச்சிகள், சிட்டுக்குருவிகள் இறக்கின்றன. இதனால் கால்நடைகள், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலுமாக பாதிக்கப்படுகின்றன. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மின்துறை வழங்க கூடிய இழப்பீடு மிகவும் குறைவான தொகை என்றும், அதை உயர்த்தி வழங்கிட வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உயர்மின் கோபுரம் அமைக்கும் பணிக்காக கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு, விவசாயிகளுக்கு அதிக இழப்பீட்டு தொகை வழங்கிட வேண்டும். இதை வலியுறுத்தி கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டரிடம் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் மனு கொடுக்க உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com