

தர்மபுரி,
தர்மபுரி மாவட்ட ஜனநாயக உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திராவிடர் கழக மாவட்ட தலைவர் சிவாஜி தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் குணசேகரன், தலைமை கழக பேச்சாளர் பெரியார்செல்வன், மாநில செயல்தலைவர் தகடூர் தமிழ்ச்செல்வி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க. மாவட்ட துணைச்செயலாளர் சூடப்பட்டி சுப்பிரமணி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் தேவராசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் குமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி கோவேந்தன், மாவட்ட செயலாளர் ஜெயந்தி, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில செயலாளர் சாதிக்பாட்ஷா, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுபேதார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் அன்வர்பாஷா மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினார்கள்.
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிப்பது தொடர்பாக தமிழக சட்டசபையில் அனைத்து கட்சிகள் சார்பில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட இரு மசோதாக்களுக்கு ஜனாதிபதியின் ஒப்புதலை பெற மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேற தமிழக அரசு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழகத்தை சேர்ந்த ஏழை-எளிய மக்கள், கிராமப்புற மக்களின் கல்வி உரிமையை பாதிக்கும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
இதில் பல்வேறு அரசியல் கட்சிகளின் நிர்வாகிகள், மாதர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர்.