காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பல்வேறு அமைப்புகள் கருப்பு கொடி போராட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பல்வேறு அமைப்புகள் கருப்பு கொடி போராட்டம் நடத்தியதுடன் பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருப்பு கொடி ஏந்தி கண்டன கோசங்கள் எழுப்பினர்.
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி பல்வேறு அமைப்புகள் கருப்பு கொடி போராட்டம்
Published on

செக்கானூரணி,

மதுரை காமராஜர் பல்கழைக்கழகம் முன்பு புரட்சிகர மாணவர் முன்னணி அமைப்பு சார்பில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் 30-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரியும். பிரதமர் மோடி தமிழகம் வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் கருப்பு கொடி ஏந்தி கண்டன கோசங்கள் எழுப்பினர்.

திருமங்கலம் மார்க்கெட்டில் வியாபாரிகள் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் நடவடிக்கை மேற்கொண்டனர். மேலும் சிலர் கருப்பு கொடி அணிந்து வியாபாரம் செய்தனர். தொடர்ந்து தி.மு.க. நிர்வாகிகள் கருப்பு சட்டை அணிந்து, காங்கிரஸ் கட்சியினர் கருப்பு கொடி அணிந்து எதிர்ப்பு தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருப்பரங்குன்றம் வட்டார கிளையின் சார்பாக 16 கால் மண்டபத்தின் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாரத் துணைத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செயலாளர் மஞ்சுளா முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசகன், துணை செயலாளர் வினோத்குமார் கோரிக்கை விளக்கவுரையாற்றினர். முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் உக்கிரபாண்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார். பொருளாளர் ஜெய்சன் டேனி மோசஸ் நன்றி கூறினார்.

திருநகரில் முன்னாள் எம்.பி. மாணிக்கதாகூர் வீடு, காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி கட்டப்பட்டது. மேலும் திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விப்பட்டி பகுதிகளில் பல்வேறு தெருக்களில் கருப்பு கொடி கட்டப்பட்டிருந்தது.

திருப்பரங்குன்றத்தில் தி.மு.க. பகுதி கழகம் சார்பில் முன்னாள் நகர் மன்ற துணை தலைவர் ஆறுமுகம் தலைமையில், முன்னாள் கவுன்சிலர்கள் ரமேஷ், சாமிவேல், தலைமை கழக பேச்சாளர் கவிஞர் ஜீவா உள்பட தி.மு.க.வினர் கருப்பு சட்டை அணிந்து திருப்பரங்குன்றம் மேலரதவீதியில் இருந்து பஸ் நிலையம் வரை நடை பயணத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மதுரை மாவட்டம் சார்பில், நகர், மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கடை, நிறுவனங்கள், அலுவலகங்களில் கருப்பு கொடி கட்டி தங்களது எதிர்பை தெரிவித்தனர்.

வாடிப்பட்டி, சமயநல்லூர், பரவை உள்ளிட்ட பகுதிகளில் தி.மு.க. ஆதரவு கட்சிகள் கடைகளில் கருப்பு கொடி கட்டியிருந்தனர். அதே போல் வாடிப்பட்டி முன்னாள் பேரூர் செயலாளர் பால்பாண்டியன் உள்பட தி.மு.க., தி.க., விடுதலைசிறுத்தைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் கருப்புசட்டை அணிந்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலூரில் அரசு மருத்துவமனை முன்பு உள்ள அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி அலுவலகத்தில் கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தி.மு.க. சார்பில் நகர் செயலாளர் முகமது யாசின் தலைமையில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் கருப்பு கொடி அணிந்து மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com