ஜனநாயக வாலிபர் சங்கம், சி.ஏ.ஏ. எதிர்ப்பு இயக்கத்தினர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஊர்வலம்

ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சி.ஏ.ஏ. எதிர்ப்பு இயக்கத்தினர் இணைந்து திருச்சியில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஊர்வலம் நடத்தினர்.
ஜனநாயக வாலிபர் சங்கம், சி.ஏ.ஏ. எதிர்ப்பு இயக்கத்தினர் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக ஊர்வலம்
Published on

திருச்சி,

மத்திய அரசு சமீபத்தில் நாடாளுமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்தை நிறைவேற்றியது. இச்சட்டத்திற்கு முஸ்லிம் அமைப்பினர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள். இந்த நிலையில் திருச்சி மத்திய மண்டல இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர், சி.ஏ.ஏ. எதிர்ப்பு இயக்கத்தினர் இணைந்து திருச்சியில் நேற்று குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு ஊர்வலத்தை நடத்தினர்.

திருச்சி வெஸ்ட்ரி மேல்நிலைப்பள்ளி முன்பிருந்து தொடங்கிய ஊர்வலத்திற்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்க திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் பா.லெனின் தலைமை தாங்கினார். தலைவர் சுரேஷ் முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் எஸ்.பாலா தொடங்கி வைத்தார்.

திரும்பப்பெற வேண்டும்

ஊர்வலத்தில் திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட திருச்சி, புதுக்கோட்டை, கரூர், தஞ்சாவூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திரளாக கலந்து கொண்டனர். மேலும் சிறுவர், சிறுமிகள் கையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்தியும், தேசியக்கொடியை ஏந்தியபடியும் ஊர்வலத்தில் பங்கேற்றனர்.

குடியரசு தினத்தை வரவேற்போம், குடியுரிமை திருத்த சட்டத்தை வேரறுப்போம் என்றும், இலங்கை தமிழர்களை பரிதவிக்கவிடும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெற வேண்டும், குடியுரிமையில் மதத்தை திணிக்கக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அதில் இடம் பெற்றிருந்தன. ஊர்வலம் வெஸ்ட்ரி பள்ளி முன்பிருந்து புறப்பட்டு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் முடிவடைந்தது. பின்னர் அங்கு கண்டன கூட்டம் நடந்தது.

சட்டமன்றத்தில் தீர்மானம்

கூட்டத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில செயலாளர் எஸ்.பாலா பேசியதாவது:-

இந்திய மக்களை மதத்தின் பெயரால் பிரித்து குடியுரிமை வழங்குகிற, மோடி அரசின் குடியுரிமை திருத்த சட்டத்தை இடதுசாரி இளைஞர் கூட்டமைப்பு கண்டிக்கிறது. அதை திரும்பப்பெற வேண்டும். மொழி, இனம், மதம் அடிப்படையில் மக்களை பிரிப்பது அநாகரீகமான செயல் ஆகும். தமிழக மக்களின் உணர்வை பிரதிபலிக்கக்கூடிய வகையில்தான் நாங்கள் ஊர்வலம் நடத்தி இருக்கிறோம். தமிழக அரசு உடனடியாக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி, தமிழக மக்களின் உண்மையான உணர்வுகளை பிரதிபலிக்க வேண்டும்.

ஏனென்றால், குடியுரிமை திருத்த சட்டம் மாநிலங்களவையில் நிறைவேறியதற்கு முழு முக்கிய காரணம் அ.தி.மு.க.வும், பாட்டாளி மக்கள் கட்சியும்தான். இப்படிபட்ட மிகப்பெரிய துரோகத்தை தமிழக மக்களுக்கு எடப்பாடி அரசு இழைத்துள்ளது. 30 ஆண்டுகால தொப்புள்கொடி உறவான இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. சி.ஏ.ஏ. திருத்த சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றும் வரை இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தொடர் போராட்டங்களை நடத்தும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com