

ஆக்கிரமிப்பு
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட வரதராஜபுரம் பகுதியில் சிலர் பொதுமக்களுக்கும் போக்குவரத்தும் இடையூறாக சாலையோரம் ஆக்கிரமிப்பு செய்து கடைகள் மற்றும் வீடுகளை கட்டி இருந்தனர். இதன் காரணமாக அந்த வழியாக வரும் பொதுமக்கள் பாதை இல்லாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இதற்கு நிரந்தர தீர்வு காணக்கோரி வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர்.
கட்டிடங்கள் இடிப்பு
இதைத்தொடர்ந்து கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் உத்தரவின் பேரில், நேற்று திருவள்ளூர் நகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், நகராட்சி பொறியாளர் நடராஜன், உதவி செயற்பொறியாளர் சீனிவாசன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ், திருவள்ளூர் தாசில்தார் செந்தில்குமார் மற்றும் நகராட்சி அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் இணைந்து திருவள்ளூர் டவுன் போலீசார் உதவியுடன் வரதராஜபுரம் பகுதிக்கு சென்று அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கடைகள் மற்றும் வீடுகளில் மின் இணைப்புகளை துண்டித்து பொக்லைன் எந்திரம் மூலம் முழுவதுமாக இடித்து அகற்றினார்கள்.
எல்லாபுரம் ஒன்றியம்
திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் பாகல்மேடு ஊராட்சியில் பஸ் நிறுத்தம் அருகே நெடுஞ்சாலைத்துறையினர் சாலையை அகலப்படுத்தி வருகின்றனர். 20 மீட்டர் அகலம் கொண்ட இந்த சாலையில் 7 மீட்டர் ஆக்கிரமிப்பு செய்து சிலர் கடைகள் மற்றும் வீடுகளை கட்டியிருந்தனர். இந்த நிலையில், நெடுஞ்சாலைத்துறையினர் ஆக்கிரமிப்பாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக 6 முறை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி நோட்டீஸ்களை வழங்கினர்.
ஆனால், ஆக்கிரமிப்பாளர்கள் தாங்களே முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை. இந்த நிலையில், நேற்று காலை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் தஸ்தேவிஸ்பெர்னாண்டோ தலைமையில் உதவி என்ஜினீயர்கள் ராஜ்கமல், ஜெயமூர்த்தி மற்றும் நெடுஞ்சாலை துறை பணியாளர்கள் உள்ளிட்டோர் 2 பொக்லைன் எந்திரங்கள் மூலம் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீடுகள் மற்றும் கடைகளை இடித்தனர்.
சமரச பேச்சுவார்த்தை
அப்போது ஆக்கிரமிப்பாளர்கள் இன்னும் 2 நாட்களில் ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களில் உள்ள தங்களது பொருட்களை எடுத்துக்கொண்டு தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக்கொள்வதாக உறுதி கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதுவரை ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளை வலியுறுத்தினர். இதனால் அங்கு பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி தலைமையில் வெங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் மற்றும் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு ஆக்கிரமிப்பாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும், ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ந்து தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்துக்கோட்டை தாசில்தார் ராமன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். ஆக்கிரமிப்பாளர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். ஆக்கிரமிப்புகளை அகற்றி சம்பந்தப்பட்டவர்களுக்கு வேறு ஏதாவது இடத்தில் இடம் ஒதுக்கித் தருவதாகவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய உதவிகளை செய்வதாகவும் தாசில்தார் உறுதி கூறினார். அதன்பின்னர், நெடுஞ்சாலை துறையினர் ஆக்கிரமிப்புகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றினர்.