தூத்துக்குடியில் வணிக வளாகம் இடிப்பு; வியாபாரிகள் சாலை மறியல் - கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது

தூத்துக்குடியில் வணிக வளாகம் இடிக்கப்பட்டதை கண்டித்து கீதாஜீவன் எம்.எல்.ஏ தலைமையில் வியாபாரிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடியில் வணிக வளாகம் இடிப்பு; வியாபாரிகள் சாலை மறியல் - கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாநகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தை மற்றும் வணிக வளாகம் கீழரதவீதி, அழகேசபுரம் பகுதியில் உள்ளது. தற்போது அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் திருமண மண்டபம் கட்டப்பட உள்ளதால், வணிக வளாகத்தில் இருந்த 45 கடைகளை காலி செய்ய மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதனை எதிர்த்து கடைக்காரர்கள் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து அங்கிருந்த 7 கடைகளுக்கு மட்டும் வருகிற 10-ந் தேதி வரை செயல்பட கோர்ட்டு அவகாசம் அளித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், தூத்துக்குடி மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பொக்லைன் எந்திரம் மூலம் வணிக வளாகத்தை இடித்து தள்ளினர். ஒரே கூரையின் கீழ் கடைகள் உள்ளதால், ஒரு பகுதியில் கட்டிடத்தை இடிக்கும் போது கோர்ட்டு அவகாசம் வழங்கிய 7 கடைகளும் சேர்ந்து இடிந்து விழுந்தன. இதனால் வியாபாரிகள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். மேலும் அங்கு இருந்த டாஸ்மாக் கடை இடிந்து, மதுபாட்டில்களும் சேதம் அடைந்தன. இதையடுத்து மாநகராட்சியை கண்டித்து வியாபாரிகள் தி.மு.க. வடக்கு மாவட்ட செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமையில் அங்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மறியலில் தி.மு.க மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், பகுதி செயலாளர் சுரேஷ்குமார், ரவீந்திரன் மற்றும் வியாபாரிகள் கலந்து கொண்டனர். சுமார் 2 மணி நேரம் வரையில் போராட்டம் நீடித்தது. இதைத் தொடர்ந்து போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். 7 கடைகளுக்கு தற்காலிக இடம் ஒதுக்கவும், சேதம் அடைந்த பொருட்களுக்கு இழப்பீடு வழங்கவும் உறுதியளித்தனர். இதை தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com