கோரிக்கைகளை வலியுறுத்தி 16 இடங்களில் நாளை ஆர்ப்பாட்டம் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லை மாவட்டத்தில் 16 இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடத்துவது என்று ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கோரிக்கைகளை வலியுறுத்தி 16 இடங்களில் நாளை ஆர்ப்பாட்டம் ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்
Published on

நெல்லை,

தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் ராஜ்குமார் தலைமை தாங்கினார். மாநில செயற்குழு உறுப்பினர் பிரம்மநாயகம் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் பால்ராஜ் வரவேற்று பேசினார். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

பணி நிரவல் என்ற பெயரில் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு அனுப்பும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். பொதுமாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்த வேண்டும். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு சார்பில் நடந்த வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு நிறுத்தப்பட்ட பதவி உயர்வை உடனே வழங்க வேண்டும்.

நெல்லை மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் வள்ளியூர் கல்வி மாவட்ட அலுவலர் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நெல்லை மாவட்டத்தில் நெல்லை, மானூர், நாங்குநேரி, சங்கரன்கோவில், கீழ்ப்பாவூர், வாசுதேவநல்லூர், ஆலங்குளம், குருவிகுளம், மேலநீலிதநல்லூர், தென்காசி உள்ளிட்ட 16 வட்டார தலைநகரங்களில் அமைந்துள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நாளை (வெள்ளிக்கிழமை) மாலையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது. மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில செயலாளர் முருகேசன், மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் பரமசிவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டேவிட் பொன்ராஜ், அமுதா, நெல்லையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com