

பெரம்பலூர்,
10 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு பணியாளர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் (ஜாக்டோ-ஜியோ) நேற்று பெரம்பலூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ இணைப்பு சங்கங்களான பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் தலைவர் ராஜ்குமார், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் ராஜேந்திரன், தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் செயலாளர் கமலகண்ணன், தமிழக ஆசிரியர் கூட்டணியின் செயலாளர் செல்வராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர்.
புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 7-வது ஊதியக்குழு அறிவித்த ஊதிய உயர்வில் 21 மாத கால நிலுவை தொகையினை உடனடியாக தமிழக அரசு வழங்கிட வேண்டும். 7-வது ஊதியக்குழு முரண்பாடுகளை களைந்திட அமைக்கப்பட்டுள்ள ஒரு நபர் குழு ஆசிரியர் இயக்கங்களை அழைத்து கலந்துரையாடல் செய்து முரண்பாடுகளை முழுமையாக களைந்திட வேண்டும்.
தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கும் வகையிலும், அரசுப்பள்ளிகளை நசுக்கும் வகையிலும் 25 சதவீதம் மாணவர்களை ஆர்.டி.இ. சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் கட்டாயமாக சேர்க்க வேண்டும் என்றும், சேர்க்காத பள்ளிகளை கண்காணித்து நடவடிக்கை எடுத்தும், அவர்களுக்கான கட்டணத்தை அரசே செலுத்தும் என்றும் கடைபிடிக்கும் நடைமுறையை முற்றிலுமாக கைவிட வேண்டும். பள்ளிக் கல்வித்துறையில் ஆட்குறைப்பு என்ற அடிப்படையில் பணிநிரவல் மூலம் ஆசிரியர்களை பணிமாறுதல் செய்வதை கைவிட வேண்டும்.
11, 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு சுமையை கருத்தில் கொண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர்களை 11, 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் மகேந்திரன் போராட்ட நிறைவுரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஜாக்டோ-ஜியோ இணைப்பு சங்கங்கள் அனைத்தும் பங்கேற்றன.