தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம்
Published on

கீரமங்கலம்,

தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் அரசியல் கட்சியினர் பல்வேறு அமைப்பினர், பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதேபோல் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த நெடுவாசல் போராட்ட குழுவினர் முடிவு செய்தனர். அதன்படி நேற்று நெடுவாசல் கிராமத்தில் போராட்ட குழுவினர் மற்றும் பொதுமக்கள் கருப்பு பட்டை அணிந்து கடைவீதிகளில் ஊர்வலமாக வந்தனர். பின்னர் துப்பாக்கி சூட்டில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதேபோல தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கீரமங்கலம் பஸ் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஆலங்குடி தொகுதி எம்.எல்.ஏ. மெய்யநாதன் தலைமை தாங்கினார். திருமயம் எம்.எல்.ஏ. ரகுபதி, முன்னாள் எம்.எல்.ஏ. ராஜசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பினர். இதில் தி.மு.க., கம்யூனிஸ்டு கட்சிகள், ம.தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர். இதேபோல புளிச்சங்காடு கைகாட்டியில் தமிழர்நலம் பேரியக் கத்தின் மாநில பொது செயலாளர் திருமுருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

புதுக்கோட்டை சின்னப்பா பூங்காவில் தமிழக மக்கள் மேடை அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சின்னதுரை, கவிவர்மன், சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கண்டன உரையாற்றினர். இதில் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சிலர் தப்பாட்டம் அடித்தபடி கோஷங்கள் எழுப்பினர்.

மணமேல்குடி பஸ் நிலையம் அருகே பல்வேறு கட்சியினர் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தொகுதி செயலாளர் கதிர்வளவன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் ராமநாதன், நாம் தமிழர் கட்சி பழனிகவியரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் துப்பாக்கி சூட்டை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ம.தி.மு.க., காங்கிரஸ் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com