குன்னூரில், ரெயில்வே குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்

குன்னூரில், ரெயில்வே குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
குன்னூரில், ரெயில்வே குடியிருப்புகளில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஆர்ப்பாட்டம்
Published on

குன்னூர்,

குன்னூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த ரெயில் நிலையம் உள்ளது. மேலும் ரெயில் என்ஜின் பணிமனை, இருப்பு பாதை பொதுப்பணித்துறை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு 150-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு சாமண்ணா பூங்கா அருகில் குடியிருப்புகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளன. இங்கு அடிப்படை வசதிகள் சரிவர செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதை கண்டித்தும், உடனடியாக அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரியும் எஸ்.ஆர்.எம்.யு. தொழிற்சங்கம் சார்பில் குன்னூர் ரெயில் நிலைய வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு குன்னூர் சங்க கிளை தலைவர் சாகுல் அமீது முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் தொழிற்சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பிறகு சேலம் கோட்ட மண்டல செயலாளர் கோவிந்தன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இங்குள்ள குடியிருப்புகளில் வசிக்கும் மக்களுக்கு சீரான முறையில் குடிநீர் வினியோகிக்கப்படுவது இல்லை. குடிநீர் தட்டுப்பாட்டால் ஊழியர்களின் குடும்பத்தினர் ஆங்காங்கே அலைந்து திரியும் நிலையை காண முடிகிறது. எனவே இங்கு நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்கி, சீரான முறையில் வினியோகம் செய்ய சேலம் கோட்ட ரெயில்வே நிர்வாகம் முன்வர வேண்டும். மேலும் குடியிருப்புகளை சுற்றி ஆபத்தான நிலையில் மரங்கள் நிற்கின்றன. பருவமழைக்காலங்களில் அவற்றின் கிளைகள் குடியிருப்புகள் மீது விழுகின்றன. மேலும் சில நேரங்களில் மரங்களே சாய்ந்து விழுகின்றன. எனவே அங்குள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அகற்ற வேண்டும். இதுதவிர குடியிருப்பு பகுதிக்குள் வெளி ஆட்கள் நடமாட்டம் உள்ளது. இதனை தடுக்க ரெயில்வே போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சாலையும் பழுதடைந்து கிடக்கிறது. அதனை ரெயில்வே நிர்வாகம் சீரமைத்து தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com