எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் உருவபொம்மை எரிப்பு

திருவாரூர் மாவட்ட பகுதிகளில் எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும் அவரது உருவபொம்மை எரிக்கப்பட்டது.
எச்.ராஜாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் உருவபொம்மை எரிப்பு
Published on

திருத்துறைப்பூண்டி,

திரிபுரா மாநிலத்தில் லெனின் சிலை அகற்றப்பட்டது தொடர்பாக பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவின் முகநூல் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்த பதிவில் தமிழகத்தில் பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும், எச்.ராஜாவை கண்டித்தும் திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நீடாமங்கலத்தில் தி.க. சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழக நிர்வாகி சிவஞானம் மற்றும் பலர் கலந்து கொண்டு எச்.ராஜாவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் திருத்துறைப்பூண்டி காமராஜர் சிலை அருகே தி.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு தி.க. மாவட்ட செயலாளர் பொன்முடி தலைமை தாங்கினார். தி.மு.க. நகர செயலாளர் பாண்டியன், டி.டி.வி.தினகரன் அணி நகர செயலாளர் தாஜீதீன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நகர செயலாளர் ரகுராமன், காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் எழிலரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருத்துறைப்பூண்டி புதிய பஸ் நிலையம் அருகே அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எச்.ராஜாவை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். நகர தலைவர் காந்தி, ஒன்றிய செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட துணைச்செயலாளர் ராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

கூத்தாநல்லூர் அருகே உள்ள வடபாதிமங்கலத்தில் மன்னார்குடி கிழக்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் குமரேசன் தலைமையில் பா.ஜனதா கட்சி தேசிய செயலாளர் எச்.ராஜா உருவ பொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எச்.ராஜாவை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதில் மன்னார்குடி கிழக்கு ஒன்றிய அவைத்தலைவர் அருண், மாவட்ட பிரதிநிதிகள் செல்வம், சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com